×

பாளையில் இன்று பரபரப்பு; குடிநீர் தொட்டியில் ஏறி குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா: போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்துவிட்டதாக புகார்

நெல்லை: போலி ஆவணம் மூலம் தனது நிலத்தை அபகரித்து மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டி கட்டி விட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மேலப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று தர்ணா போராட்டம் நடத்தினார். நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (50). ஏசி மெக்கானிக். இவரது நிலம் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி கட்டி விட்டதாகவும், தனது இடத்தை மீண்டும் ஒப்படைக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி பாளை சேவியர் காலனி பகுதியில் குறிப்பிட்ட குடிநீர் தெட்டி மீது ஏறி நின்று தனக்கு இழப்பீடு கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். இந்நிலையில் கணேசன், தனது மனைவி மற்றும் மகளுடன் இன்று காலை 6.30 மணி அளவில் மீண்டும்  சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி உச்சிக்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் சென்று கணேசன் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கணேசன் கூறுகையில், போலி ஆவணம் தயாரித்து தனது நிலத்தை அபகரித்து மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டி கட்டி விட்டதாகவும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கணேசன் மற்றும் குடும்பத்தினர் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம்  புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசல் அருகே மரத்தடியில் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்களது ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.


Tags : Dharna ,land , Stir today in the palm; Worker Dharna with family climbs into drinking water tank
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...