×

கடன் தொல்லையால் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை: மதுரையில் பரிதாபம்

மதுரை: கடன் தொல்லையால் மதுரையில் தாய், 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக  தாங்கள் ஆசையாக வளர்த்த நாய்க்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து, கொன்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சியை சேர்ந்தவர் அருண். கட்டுமான ஒப்பந்ததாரர்.  இவரது மனைவி வளர்மதி (38). இவர்களது மகள்கள் அகீதா (19) மற்றும் பிரீத்தி (17). இவர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை, ஒத்தக்கடையில் மலைச்சாமிபுரம், எல்கேடி நகரில் குடியேறினர். அப்பகுதியில் சில வீடுகளை கட்டி, விற்பனை செய்துள்ளார். அருண், தொழிலை மேம்படுத்த, பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

மூளையில் கட்டி ஏற்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 6 மாதத்திற்கு முன்பு, அருண் இறந்து விட்டார். இதனால் வளர்மதி, தனது இரு மகள்களுடன் வருமானம் ஏதுமின்றி, சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் அருணுக்கு கடன் கொடுத்த அனைவரும், வளர்மதியிடம் பணம் கேட்டு, நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வளர்மதியும், மகள்களும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தனர். வளர்மதியின் தம்பி மற்றும் அவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தம்பி மகள் மேகலாவையும், இவர் வளர்த்து வந்தார். நேற்று இரவு மேகலாவை மட்டும், கீழ் வீட்டிற்கு சென்று தூங்குமாறு கூறி வளர்மதி அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வளர்மதியின் வீடு, பூட்டப்பட்டிருந்தது. மேகலா வந்து பார்த்த போது, அவர்கள் வளர்த்த நாய், வீட்டிற்கு வெளியே இறந்து கிடந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டிற்கு சென்று, மேகலா இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து திறந்து, உள்ளே சென்று பார்த்த போது, வளர்மதியும், மகள்கள் அகீதா மற்றும் பிரீத்தியும் பேனில், சேலையை கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். மேலும் கையை கத்தியால் கிழித்துள்ளனர். அதில் இருந்து ரத்தம் வெளியேறியிருந்தது.

போலீசார் சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் வளர்மதி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘கணவர் இறந்ததால், அவர் வாங்கிய கடனை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பம் நடத்தவே வருமானம் இல்லாமல் இருந்தோம், இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அனைவரும், கடனை திருப்பி செலுத்துமாறு கூறி, அடிக்கடி வந்து நெருக்கடி கொடுத்தனர். கடனை திருப்பி செலுத்தும் அளவு எங்களிடம் பணம் இல்லை. இதனால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். கணவரது உறவினர்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூடாது. எனது அக்கா குடும்பத்தினர்தான் எங்களை அடக்கம் செய்ய வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், தங்களிடம் மீதமுள்ள நகைகள் மற்றும் பணம் குறித்த விவரங்களையும் வளர்மதி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒத்தக்கடை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் வைத்து நாய் கொலை
வளர்மதியின் மகள்கள் இருவரும், நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்த பின்னர், தாங்கள் ஆசையாக  வளர்த்து வரும் நாயை கவனிக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்பால், நேற்று இரவு  உணவில் விஷம் கலந்து, நாய்க்கு கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட நாய், சற்று நேரத்தில் மயங்கி விழுந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் மூவரும் படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


Tags : daughters ,suicide ,Madurai , Debt-ridden mother, 2 daughters commit suicide by hanging: Pity in Madurai
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்