கொரோனாவால் எவ்வளவு விஷயங்கள் மாறினாலும் காசியின் பக்தி, சக்தியை யாரும் மாற்ற முடியாது: தேவ் தீபாவளி விழாவில் பிரதமர் மோடி உரை.!!!

வாரணாசி: உத்திரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு  கொண்டாடப்படும் மஹா உத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும்.  அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியும் நடக்கும். தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தேவ் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா  வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, கங்கை நதியில் படகுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து, வாரணாசி கங்கை நதிக்கரையில் பிரதமர் நரேந்திர மோடி தீபங்களை ஏற்றிவைத்து தேவ் தீபாவளி விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா காரணமாக எவ்வளவு விஷயங்கள் மாறினாலும், காசியின் ஆற்றல், பக்தி சக்தி ஆகியவற்றை யாரும் மாற்ற முடியாது. 100 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அன்னபூர்ணா தெய்வத்தின் சிலை, இப்போது இங்கு திரும்பி வருகிறது. மாதா அன்னபூர்ணா தனது தாய் வீட்டிற்கு திரும்பி வருவார் என்பது பெரும் அதிர்ஷ்டம். எங்கள் தெய்வங்களின் சிலைகள் எங்கள் விலைமதிப்பற்ற மரபின் ஒரு பகுதியாகும் என்றார்.

எங்களுக்கு பாரம்பரியம் என்றால் நாட்டின் பாரம்பரியம்! பரம்பரை என்பது சிலருக்கு, அவர்களின் குடும்பம் மற்றும் அவர்களின் குடும்பப் பெயர். எங்களுக்கு பாரம்பரியம் என்றால் நம் கலாச்சாரம், நமது நம்பிக்கை, நமது மதிப்புகள்! அவரைப்  பொறுத்தவரை, பரம்பரை என்றால் அவரது சிலைகள், அவரது குடும்ப புகைப்படங்கள் என்றார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். தேவ் தீபாவளி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>