×

சிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தையால் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் குழந்தையின் தாய் செலின் சான் (Celine Ng Chan) தாய்மையடைந்தார். அச்சமயம் அவர் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடு திரும்பிய பிறகு அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் உரிய சிகிச்சை பெற்ற அவர், இம்மாத துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். செலினுக்கு ஏற்கெனவே இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

செலின் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது அக்குழந்தையின் உடலில் கோவிட்-19 நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டு  ஆச்சரியமடைந்தனர். தாயிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்குக் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது குறித்து தெளிவான ஒரு முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் வரவில்லை. இன்றைய தேதி வரை  கருப்பையைச் சுற்றியுள்ள திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் இல்லை. எனினும், கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம் வைரஸ் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீன மருத்துவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், கொரோனா பாதித்த கர்ப்பிணித் தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுமா என்பது தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூரில் நடந்துள்ள இந்நிகழ்வின் மூலம் விடை கிடைக்கும் என  நம்பப்படுகிறது.

Tags : baby ,Singapore ,Doctors , A baby born to a pregnant woman infected with corona in Singapore: Doctors in surprise !!!
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…