நெமிலி வழித்தடத்தில் அரசு பஸ்களில் கட்டணம் திடீர் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

நெமிலி: நெமிலி வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்களில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கடந்த மாதம் முதல் இயங்கி வருகிறது. இருப்பினும் பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. வேலூரில் இருந்து நெமிலி வழியாக தக்கோலம்  செல்லும் எண் 486 என்ற அரசு பஸ் உட்பட அனைத்து அரசு பஸ்களிலும் கட்டணம் எவ்வித முன்னறிவிப்பின்றி இரு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அனைத்து தரப்பு பயணிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த வாரம் நெமிலியில் இருந்து வேலூருக்கு ₹40 கட்டணம் வசூலித்த நிலையில் தற்போது ₹58 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் அரசு பஸ்களில் மட்டுமே அதிக அளவில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பஸ்சை நம்பி தினமும் பல்வேறு பகுதிகளுக்கு பிழைப்பு தேடிச்செல்லும் கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள் என பல தரப்பினர் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>