கொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.!!!

வாஷிங்டன்: அமெரிக்கா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 100% பலன் தருவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த  8 மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய்  தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு  மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவிலும் மாடர்னா என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனை  ஓட்டமாக அமெரிக்காவில் 30,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதனை நடைபெற்றது. இதில் 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசர  பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.

மாடர்னா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி மருந்துகள் தயாரிக்கப்படும். ஒருவருக்கு இரு டோஸ்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்து 1 கோடி பேருக்கு சரியாக  இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தை 6 மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 95% தங்கள் கொரோனா தடுப்பூசி பலன்  தருவதாக மாடர்னா நிறுவனம் அறிவித்த நிலையில், தற்போது 100% பலன் தருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: