வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டர் உள்பட 2 பேர் கைது

தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம், சிடிஓ காலனி, 3வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். மனைவி சந்திரா. இருவரும் டாக்டர். இவர்களது மகன் தீபக் (28). இவரும் டாக்டர். இவர்களது வீட்டில் முடிச்சூர், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பிரியா (27) என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையே டாக்டர் தீபக்கின் நடவடிக்கை சரியில்லாததால், கடந்த 18ம் தேதி வேலையில் இருந்து நின்றுவிட்டார் பிரியா. இதையடுத்து, சம்பள பாக்கியை வாங்குவதற்காக நேற்று சண்முகத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் (35) இருந்தனர். அவர்களிடம் சம்பள பாக்கியை பிரியா கேட்டபோது, தனியறைக்கு அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், நகை திருடியதாக போலீசில் புகார் அளிப்போம் என பிரியாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அஞ்சவில்லை. இதையடுத்து, ‘நகை திருடிய பெண்ணை பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று இருவரும், தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்து, 3 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பிரியாவின் உடலில் நகக்கீறல்களுடன் உடைகளும் கிழிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரியாவிடம் விசாரித்தபோது, ‘இருவரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் நகை திருடியதாக புகார் அளித்துள்ளனர்’ என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தீபக் உள்பட 2 பேரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>