×

நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோ பதிவு : ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை :ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த முன்னாள் நீதிபதி கர்ணன். இவர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்குவங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவர் வீடியோக்கள் சில யூ-டியூபில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ பதிவில், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்தும், பெண் வழக்கறிஞர்கள் குறித்தும் அவதூறான சில கருத்துக்கள் பேசி வீடியோ பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து, தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வீடியோ பதிவுடன் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் நீதிபதி கர்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 30ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு, கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணையின் போது, வீடியோக்களை இனி வெளியிட மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இருவரும் டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Tags : Karna ,Chennai High Court , Judges, libel, video recording, Judge Karnan, arrested
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...