×

104 ஆண்டுகள் பழமையான கிரானைட் கல்லாலான மதுரை கலெக்டர் அலுவலகம் காவி நிறத்திற்கு மாறுகிறது

மதுரை: 104 ஆண்டு பழமையான மதுரை கலெக்டர் அலுவலக கிரானைட் கட்டிடம், செங்காவி நிறத்திற்கு மாற உள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி மதுரையை ஆட்சி செய்தது. 1790ல் செப்.6ம் தேதி மைக்கேல் லியோ மதுரையின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் மதுரை நகரம் வந்தவுடன் 1837ல் ஜான் பிளாக் பெர்ன், மதுரையில் உள்ள மன்னர்களின் கோட்டைச்சுவரை இடித்து நகரை விரிவாக்கம் செய்தார்.

ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தெப்பக்குளம் பகுதியில் குடியிருந்தனர். கலெக்டர் அலுவலகம் அப்பகுதியில் இயங்கியது. 1857ல் முதல் சுதந்திரப்போர் ஏற்பட்டபோது இந்தியர்கள் நடுவில் குடியிருந்தால், நமக்கு ஆபத்து என கருதிய ஆங்கிலேயர்கள் வைகை ஆற்றின் வடபகுதிக்கு தனது ஆட்சிக்கான அலுவலகத்தை மாற்றினர். வைகையின் வடகரையில் இருந்து ராணி மங்கம்மாளின் அரண்மனை (தற்போது காந்தி நினைவு மண்டபம்) தற்காலிகமாக கலெக்டர் அலுவலகமாக இயங்கியது. இதனைத் தொடர்ந்து, புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். 1914ல் பணி துவங்கி, முற்றிலும் கிரானைட் கல்லால் கட்டப்பட்டது.

மதுரையின் 107வது கலெக்டராக இருந்த பாடிசன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியை விரைவு படுத்தினார். புதிய கட்டிடத்தை 1916ல் திறந்தார். பல அழகிய வேலைப்பாடுகளுடன், மாடிப்படிகள் சிற்ப வேலைகளுடன் கல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 104 ஆண்டுகளாகியும் கட்டிடத்தில் விரிசல் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. இன்னும் பழமை மாறாமல் கம்பீரமாக தற்போதும் காட்சி தருகிறது.

இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கும் காவி வர்ணம் பூச வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, மாதிரியாக, மதுரை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கலால் உதவி ஆணையர் அலுவலகத்தின் முகப்பில் காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட்ட கலெக்டர், சிறிய மாற்றத்துடன், பழமையான கலெக்டர் அலுவலக கிரானைட் கற்கட்டிடத்தை காவி வர்ணம் பூச உத்தரவிட்டுள்ளார். விரைவில் கிரானைட் கட்டிடம் செங்காவி வர்ணமாக காட்சி தர உள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள் இதுபோன்று செங்காவிக்கு மாறுகிறது. காவல்நிலையங்கள் இதுபோன்று காவி நிறத்தில் இருந்து, தற்போது ஊதா போன்ற நிறத்திற்கு மாறிவிட்டது. எனவே, பழமையான இந்த கட்டிடத்தை காவியாக மாற்றினால், அதன் கல்கட்டிடம் என்ற நிலை மாறிவிடும். அடுத்த தலைமுறை கல்கட்டிடம் என கூறமாட்டார்கள். பழமை மாறாமல் அப்படியே இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Madurai Collector ,Office , Madurai, Collector Office
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...