தமிழகத்தில் கண்டும், காணாமல் விடப்பட்டதால் பறிபோகும் கோயில் நிலங்கள்

நெல்லை: அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதால் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலைங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அறநிலையத்துறை தனது தூக்கத்தை கலைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய கோயில்கள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 28 கோட்டங்கள் மூலம் கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் உள்ள கோயில்கள் தனி இணை ஆணையர் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை ஆணையர், உதவி ஆணையர், உதவி ஆணையர் அந்தஸ்திலான நகை சரிபார்ப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களுக்கு மன்னர்கள், முன்னோர்கள் தினசரி வழிபாடு, திருவிழாக்கள் தங்குதடையின்றி நடைபெற வேண்டி நிலங்கள், தங்கம், வெள்ளி நகைகள், வைரங்கள் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத நகைகளை தானமாக வழங்கி உள்ளனர். பல கோயில்களில் உண்டியல் மூலம் கிடைக்கும் பல கோடி வருமானத்தில் திருக்கோயில் பணியாளர்களுக்கு சம்பளத்திற்கு 40 சதவீதம் போக மீதி தொகை அரசு கஜானாவுக்கு சென்று விடுகிறது. இதனை அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. இவைதவிர அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 282 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. மேலும் 22 ஆயிரத்து 600 கட்டிடங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் என ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 723 ஏக்கர் நிலங்கள் பாசன பரப்பாக உள்ளது.

இவைகள் மூலம் கோயிலுக்கு வரும் வருமானம் என்பது சொற்பமாக உள்ளது. பல இடங்களில் கோயில் நிலங்களை அடையாளம் காணமுடியாத நிலை காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இதில் பல இடங்கள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. பல விவசாய நிலங்களில் குத்தகை பணம் வசூலிக்காமல் நிலுவையாகவே பல லட்ச ரூபாய் உள்ளது. இதேபோல் மேலப்பாளையம் சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. மேலும் கோயில் தென்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் நிலத்தை சிலர் விற்பனை செய்யவும் முற்பட்ட போது அறநிலையத்துறை விழித்துக் கொண்டு தடுத்தது.

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. மேலும் இடம் அமைந்துள்ள பகுதி குறித்து புகைப்படம் எடுத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க கோயில் நிலம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. குத்தகைதாரர் பெயரில் உள்ள நிலங்கள் வேறு நபருக்கு மாற்றி விடப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோயில் நிலம் முறைகேடு குறித்த பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது என்றனர்.

Related Stories:

>