அதிக வருமானம் வரும் கோயில்களில் 2 உதவி ஆணையர் பணியிடங்கள்: முதற்கட்டமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உருவாக்கம் அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க, வருவாய் செலவினங்களை கண்காணிக்க அதிக வருமானம் வரும் கோயில்களில் 2 உதவி ஆணையர் பணியிடங்கள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இப்பணியிடங்களை ஏற்படுத்தி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சட்டப்பிரிவு 46ன் கீழ் இணை ஆணையர் நிலையில் நிர்வகிக்கப்பட்டு வரும் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு உபகோயில்களாக 17 கோயில்கள் உள்ளன.

இக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாத்தல், முறைப்படுத்துதல் அவற்றில் இருந்து பெற வேண்டிய நிலுவை தொகையை வசூலித்தல், கோயில் தொடர்புடைய வழக்குகளை நடத்துதல், அவற்றின் போக்கினை கண்காணித்தல் போன்ற பணிகளுக்கு இணை ஆணையருக்கு உதவிபுரிய உதவி ஆணையர் நிலையில், உதவி ஆணையர் (நிலங்கள்) பணியிடம் ஏற்படுத்துவது அவசியமாகும். கோயில் கட்டண சீட்டுகள் விற்பனை, இதர வருவாய் இனங்களை கண்காணித்தல், கோயில் அலுவலகத்தின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்தல், பிரசாத தயாரிப்பு மற்றும் அன்னதான திட்டங்களுக்கான பொருட்கள் மற்றும் கோயில் பண்டகசாலைகக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல், அவற்றை அளவிட்டு நாள்தோறும் அளித்தல் ஆகிய பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா போன்ற அனைத்து பணிகளையும் எவ்வித குந்தகமும் இன்றி சிறப்பாக மேற்கொள்ள உதவி ஆணையர் (நிர்வாகம்) பணியிடம் ஏற்படுத்துவது அவசியமாகும்.எனவே, இக்கோயிலில் 2 பணியிடங்களை அயல்பணி அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>