×

உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்

சென்னை: தண்ணீரில் இருந்த செடி, கொடிகள் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை அடைத்து கொண்டதால் அதை உரிய நேரத்தில் மூடமுடியவில்லை. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் தானாகவே மதகு வழியாக வெளியேறி கடலில் கலந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் குறைந்தது. சென்னை மாநகரின் குடிநீருக்கு பயன்பட வேண்டிய நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் பெய்த மழையால் 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக நிரம்பியது. இதை தொடர்ந்து கடந்த 25ம் ேததி பிற்பகல் 12 மணியளவில் முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக அன்று மாலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 8,436 கன அடி வரை உயர்ந்தது. இதனால், ஏரியின் நீர் மட்டம் 22.07 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து ஏரியில் இருந்து அன்றிரவு 5 கண் மதகு மற்றும் 19 கண் மதகுகள் வழியாக 9 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் மழை குறைந்ததால், கடந்த 26ம் தேதி ஏரிக்கு வரும் நீர்வரத்து 2446 கன அடியாக குறைந்த நிலையில், 500 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 27ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 6 மணி நிலவரப்படி 1730 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. இதனால், 1074 கன அடியாக வெளியேற்றுவது குறைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 560 அடியாக குறைந்த நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இதை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்ைப நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு வடகிழக்கு பருவமழையின் போது, மதகுகளில் உள்ள பழுதுகளை சரி செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது தான். குறிப்பாக மதகுகள், நீர் போக்குகள், மணல் போக்கிகள் அருகே உள்ள செடி, கொடிகளை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் விட்டதன் விளைவாக, தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் 3 மற்றும் 4 வது மதகுகளில் அமலை செடிகள் சிக்கி கொண்டதால் மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஏரியில் நேற்றுமுன்தினம் காலை 621 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மதகுகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால், மதகுகள் மூட வேண்டிய இடத்தில் அமலை செடிகள் சிக்கி இருக்கும் நிலையில் அவற்றை மூட முயற்சி செய்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இருப்பினும் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் 360 கன அடி நீராக குறைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மதகுகளில் சிக்கி கொண்டுள்ள அமலை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ராட்சத மிதவை இயந்திரம் வரவழைக்கப்பட்டன. மேலும், ஜேசிபி இயந்திரமும் கொண்டு வரப்பட்டு, அங்கு சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அமலை செடிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையிலும் நேற்று மாலை 6 மணியளவில் 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் 24 அடி கொள்ளளவு ெகாண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.22 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 21.80 அடியாக நீர் இருப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி பொறியாளர் இல்லை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு உதவி பொறியாளர் நியமிக்கப்படவில்லை.தற்போது வரை கொசஸ்தலையாற்று உபவடிநில உதவி பொறியாளர் பாபு, உதவி பொறியாளராக உள்ளார். அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், தான் செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கென உதவி பொறியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : plant ,Sembarambakkam Lake , When the overflow opened the plant, the vines were entangled; Water level of Sembarambakkam Lake falls below 21 feet due to inability to close ditches
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...