×

பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில் 28 மணி நேரம் ரெய்டு: பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது

பண்ருட்டி, நவ.30: பண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 28 மணி நேரம் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில்  கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுகிசந்திரன்(62) தொழிலதிபர். இவரது மகன் முத்துகுமரன்(42) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேம்பால கட்டுமான பணி மேலாளராக உள்ளார். சுகிசந்திரன் அப்பகுதியில் விவசாயம் மற்றும் ரைஸ்மில் நடத்தி வரும் நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சொத்து வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை மற்றும் சென்னை வருமான வரித்துறையினர் 11 பேர் கொண்ட குழுவினர், சுகிசந்திரன் வீட்டில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

அப்போது பண்ருட்டி போலீசார் ஷிப்டு முறையில் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வரை சுகிசந்திரன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் அதிகாரிகள் விசாரணையை முடித்துகொண்டு வெளியில் வந்தனர். முன்னதாக, வீட்டில் கிடைத்த கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து அதே வீட்டில் ஒரு அலமாரியில் வைத்து சீல் வைத்தனர். தணிக்கை அறிக்கை பெற்ற பின்னரே இந்த ஆவணங்களை எடுக்க வேண்டும் என முத்துக்குமாரிடம் கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். ரெய்டின் போது பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களை மேல் விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

Tags : raid ,house ,businessman ,Panruti ,Billions , 28-hour raid on businessman's house near Panruti: Billions worth of documents seized
× RELATED 6 நாட்கள் சோதனையில் பறக்கும் படையினரால் ரூ.9.32 கோடி பறிமுதல்