கொளத்தூர் தொகுதி அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இடையே 2வது நாளாக கடும் மோதல்: ஓபிஎஸ் அணியினரை உள்ளே விடாமல் வெளியே அமர வைத்ததால் பரபரப்பு

சென்னை: கொளத்தூர் தொகுதி அதிமுக சார்பில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அந்த பகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜேசிடி பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, இபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தரப்பிற்கும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று கொளத்தூர் செந்தில் நகர் பகுதியில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே மண்டபத்தில் இருந்த அனைத்து நாற்காலிகளும் நிரம்பி விட்டன. கூட்டம் தொடங்கும்போது, ஓபிஎஸ் அணியை சேர்ந்த வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மண்டபத்திற்கு வந்தனர். உள்ளே அமர்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் மண்டபத்திற்கு வெளியே நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்த ஜேசிடி பிரபாகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உள்ளே சென்று உங்களை அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், அழைக்கவில்லை. அதன்பிறகு கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர், காரில் ஏறி சென்று விட்டார்.

இதுகுறித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, நாற்காலிகளை நிரப்புவதற்காகவே வெளியாட்களை அழைத்து வந்து அமர வைத்துள்ளனர். இதனால் நாங்கள் உட்காருவதற்கு இடமில்லை. கட்சிக்காக பல ஆண்டுகாலம் உழைத்த எங்களை தற்போது வீதியில் நிற்க வைத்துள்ளனர்,’’ என்றனர். கூட்டம் முடிந்து மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு வெளியே வந்தபோது ஓபிஎஸ் அணியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், வெங்கடேஷ் பாபுவை மீட்டு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories:

>