12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கலெக்டர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம்

சென்னை: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7 மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதன் தலைவர் சண்முகராஜா கூறியதாவது: சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வே்ணடும்.  இறந்த 200க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பங்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட வேண்டும், தர ஊதியத்தை 1900 ஆக உயர்த்தி திறன் மிகு இல்லா பணியாளர்களாக அறிவித்திட வேண்டும்.

சீருடை, சலுவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் படி வழங்கிட வேண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் தமிழகம் முழுவதும் 7 மண்டலங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மனு கொடுக்கும் பேரணியை நடத்தப்படுகிறது. அதன்படி, வேலூரில் டிசம்பர் 30ம் தேதி,  திருச்சி ஜனவரி 6ம் தேதி, ஈரோடு பிப்ரவரி 28ம் தேதி, விழுப்புரம் பிப்ரவரி 3ம் தேதி, தூத்துக்குடியில் பிப்ரவரி 10ம் தேதி, சிவகங்கையில் பிப்ரவரி 17ம் தேதி, சேலம் பிப்ரவரி 26ம்  தேதியில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>