×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது: ஜோதி வடிவில் இறைவனை கண்டு பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், மாட வீதியில் நடைபெறும் சுவாமி திருவீதி உலா, வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்கள் பவனி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன. இவ்விழாவின் உச்சக் கட்டமாக கார்த்திகை தீபதிருவிழா இன்று நடைபெறுகிறது.

இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை முழங்க அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.

மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது. தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக மகாதீபம் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் தற்போது ஏற்றப்பட்டது. மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. வெளியூர் பக்தர்களை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காததால் தீபத்திருவிழாவிற்கான எவ்வித ஆரவாரமும் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

Tags : Karthika Fire Festival ,Thiruvannamalai ,Annamalaiyar Temple ,Devotees ,Lord , Karthika Fire Festival in Thiruvannamalai; The great lamp was lit at the Annamalaiyar Temple: Devotees were thrilled to see the Lord in the form of a torch
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...