×

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2ம் தேதி தென்தமிழகம் நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் மழைபெய்யக்கூடும்.

அதன்படி இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (30ம் தேதி) தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வரும் டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமான முதல் மிக கனமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக் கூடும்.

சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் தென் கிழக்கு வங்ககடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மேலும் வரும் டிசம்பர் 2ம் தேதிவரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்  என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,districts ,Chennai Meteorological Center , Rain for next 3 days in southern Tamil Nadu and coastal districts: Chennai Meteorological Center
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8...