×

மழைநீரால் மூழ்கும் மாற்றுப்பாதை: திருமங்கலம் - சேடபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கும் அபாயம்

திருமங்கலம்: திருமங்கலம் - சேடபட்டி ரோட்டில் அமைக்கப்பட்டு பாலத்தின் மாற்றுப்பாதை தொடர்மழையால் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் - சேடபட்டி மெயின்ரோட்டில் அச்சம்பட்டி கிராமத்தில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடியில் கவுண்டமாநதி சவுடார்பட்டியிலிருந்து திரளி கண்மாய்க்கு செல்கிறது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாயம் இந்த கண்மாயை நம்பியுள்ளது. மேலும், திரளி அருகேயுள்ள கட்ராம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பாசனம் தரக்கூடியது. இதனால் இந்த கண்மாய்க்கு செல்லும் பாதையில் அச்சம்பட்டியில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகள் காரணமாக திருமங்கலம் - சேடபட்டி ரோட்டில் அச்சம்பட்டியில் மாற்றுபாதையாக தற்காலிகமாக சர்வீஸ்ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையில் கண்மாய் நீர் வெளியே செல்ல மூன்று உருளை குழாய்கள் வைப்பதற்கு பதிலாக ஒரேயொரு குழாய் மட்டுமே வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுவட்டார கிராமங்களான கிழவனேரி, சவுடார்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் திரளி கண்மாய்க்கு செல்லும் கவுண்டமாநதியில் தண்ணீர் பெருக்கெடுக்க துவங்கியுள்ளது. மழைநீர் அச்சம்பட்டி பாலத்தினை கடக்கும் போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுபாதையில் உள்ள ஒருகண் உருளை பாலத்தில் வழியாக தண்ணீர் முழுவதும் வெளியேறமுடியாமல் திணறி மாற்றுபாதையை மூழ்க அடிக்க துவங்கியுள்ளது.

தொடர்ந்து தண்ணீர் வரத்துள்ளதால் மாற்றுபாதை அரிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருமங்கலத்திலிருந்து - சேடபட்டி செல்லும் பாதையில் வாகனங்கள் மாற்றுப்பாதையை தற்போது கடக்கும்முன்பு திணறி வருகின்றன. இதே நிலை நீடித்தால் மாற்றுப்பாதை முற்றிலும் மூழ்கி திருமங்கலம் - சேடபட்டி இடையே போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்படும். மேலும் தண்ணீர் திரளி கண்மாய்க்கும் செல்வதும் தடைபட்டு மீண்டும் ஆற்றுப்பகுதிக்கே செல்கிறது. இதனால் பெரிய கண்மாய்களில் ஒன்றான திரளி கண்மாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரளி நீர் பாசன சங்க தலைவர் பிச்சை கூறுகையில், `15 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுதான் மழைநீர் கண்மாய் நோக்கி செல்கிறது. ஆனால், அச்சம்பட்டி பாலப்பணிகள் காரணமாக தண்ணீர் திரளி கண்மாய்க்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாலப்பணிகள் துவங்கிய போது மாற்றுபாதையில் மூன்று உருளைகுழாய்கள் வைக்க வேண்டும் என திரளிமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தோம். அப்படி செய்வதாக உறுதியளித்த அதிகாரிகள், ஒருஉருளை குழாய் மட்டும் வைத்து சென்று விட்டனர். இதனால் தண்ணீர் திரளி கண்மாய்க்குள் செல்லாமல் நடுவகோட்டை அருகேயுள்ள கால்வாயில் இருந்து பிரிந்து ஆற்றுப்பகுதிக்கு செல்கிறது. கண்மாய்க்கு தண்ணீர் வராதது எங்களின் பாசனத்தை பாதிக்கும்’ என்றார். எனவே, மாற்றுபாதையில் தண்ணீர் தேங்காமல் கண்மாய்க்கு செல்லவும், பாதை அரிக்கப்படாமல் போக்குவரத்து தொடரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமங்கலம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Thirumangalam - Chetapatti , Rainwater diversion diversion: Risk of affecting traffic between Thirumangalam - Chetapatti
× RELATED பலத்த மழையால் தரைப்பாலம் ‘டேமேஜ்’...