×

காட்பாடி அடுத்த பரதராமியில் இருந்து விரட்டப்பட்ட 6 காட்டுயானைகள் மீண்டும் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம்: சித்தூர் அருகே பரபரப்பு

சித்தூர்: காட்பாடி அடுத்த பரதராமியில் இருந்து விரட்டப்பட்ட 6 காட்டுயானைகள் மீண்டும் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்வதால் சித்தூர் அருகே கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் பண்டெலூரூ கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் 6 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள்  அதிர்ச்சி அடைந்து சித்தூர்  வனத்துறை  அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரி பிரசாத் மற்றும் வனத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து  காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.  

இதுகுறித்து  வனத்துறை அதிகாரி பிரசாத் கூறியதாவது: பலமனேர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவு உள்ளது. இந்த காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் இரையைத் தேடி தமிழக எல்லையான பரதராமி அருகே காட்டுக்குள் புகுந்து பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாட்டு வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர். ஆனால் தற்போது வனப்பகுதியில் இருந்து யாத மரி மண்டலத்திற்குள் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் காட்டுக்குள் மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் காட்டு யானைகள் விவசாய நிலத்தில் உள்ள மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைந்துள்ளது.

மொத்தம் 6 காட்டு யானைகள் உள்ளன. இவை இரையை தேடி பண்டேலூரூ கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள கரும்பு, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜங்களாபள்ளி, கட்ட கிந்த ஊரு, கொடுகு சந்தா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மீண்டும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்கு வந்தது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வனப்பகுதியொட்டியுள்ள உள்ள கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆந்திராவில் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், மீண்டும் தமிழக வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் நுழைய வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : land ,Bharatharami ,Chittoor , Katpadi, Bharatarami, chased, 6 wild elephants
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!