கொரோனா பரவல் உண்மையிலேயே குறைந்ததா? இன்னும் எவ்ளோ நாள் ‘மாஸ்க்’ அணியணும்...

* வாழ்வே பயமானதாக மக்கள் வேதனை

* சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

சேலம்: கொரோனா பரவல் உண்மையிலேயே குறைந்துள்ளதா என்ற சந்தேகத்தில் சுற்றித்திரியும் பொதுமக்கள், இன்னும் எத்தனை நாட்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என வேதனை தெரிவிக்கின்றனர். அதேவேளையில் மாஸ்க் அணியாவிட்டால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான பெரும் தொற்று நோயாக கொரோனா வைரஸ் என்னும் கோவிட்-19 நோய் உருபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, நடப்பாண்டின் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. நம் நாட்டில் மார்ச் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கி, தற்போது வரை தொடர்ந்து பரவல் இருந்து வருகிறது. மிக உச்சமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா பரவல் இருந்தது. இதனால், 93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் 7.78 லட்சம் பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 11,681 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க ஒரே வழி, முகத்தில் மூக்கையும், வாயையும் மறைக்கும் வகையில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை நாடு முழுவதும் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க ஆரம்பத்தில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் ஒருவருக்கொருவர் பெரும் பயம் தொற்றிக் கொண்டது. அந்த பயமே வெளியிடங்களுக்கு செல்வதில் எச்சரிக்கையையும், மாஸ்க், கிருமிநாசினி பயன்பாட்டை பழக்கப்படுத்திக் கொண்டது. ஆனால், ஜூலை மாதத்தில் இருந்து அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வின் காரணமாக தற்போது, வெளியில் சுற்றும் நபர்களில் பெரும்பாலானோருக்கு பயம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டும் நிலையில், இது உண்மையாகவே குறைந்ததைத்தான் காட்டுகிறதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாளைக்கு 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து தற்போது, 1400 ஆக குறைந்திருக்கிறது. இந்த பாதிப்பு குறைவு என்பது, பரிசோதனையின் குறைப்பால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதேவேளையில், தீபாவளி பண்டிகையை மிக உற்சாகமாக மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அந்த நேரத்தில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் சுற்றித்திரிந்திருந்தால், பெருமளவில் தொற்று பரவல் இருந்திருக்கும். ஆனால், அத்தகைய நிகழ்வு நடக்கவில்லை. அதனால், உண்மையிலேயே தமிழகத்தில்  கொரோனா பரவல் குறைந்திருக்கிறது என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல்தான், பெருமளவு குறைந்து விட்டதே, இன்னும் எத்தனை நாட்களுக்கு முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும், பயம் கலந்த வாழ்க்கையாகவே இனி வாழ்ந்து விட நேரிடுமோ என்ற வேதனையையும் தெரிவிக்கின்றனர். இதற்கு சுகாதாரத்துறையினர், கடும் எச்சரிக்கையை தான் விடுத்துள்ளனர். இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மூக்கு, வாயை மறைத்தபடி மாஸ்க் அணிவதன் மூலமும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்டதன் மூலமும் தான் கொரோனா பரவலை தடுக்க முடிந்துள்ளது. தற்போது ஒரே அடியாக மாஸ்க் அணிவதை மக்கள் நிறுத்திக் கொண்டால், பெரும் விளைவை சந்திக்க நேரிடும். இதற்கு 2ம் அலை தோன்றிய சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே உதாரணமாக இருக்கிறது. அதனால், கொரோனா நோயாளியே இல்லை என்ற நிலை வரும் வரைக்கும் மாஸ்க் அணிவதை நிறுத்திக் கொள்ளக்கூடாது. அதேபோல், கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தால், எவ்வித பயமும்  இன்றி மக்கள் வெளியில் வரலாம். அதுவரைக்கும் மிக பாதுகாப்பாக மாஸ்க் அணிந்து வெளியில் வருவதே சிறந்தது,’’ என்றனர்.

Related Stories:

>