×

திறப்புவிழா காணாத நாகர்கோவில் டவுன் ரயில்நிலைய கட்டிடம்: தனியார் முகவரை நியமிக்க ரயில்வே திட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் பயணசீட்டு கொடுக்க மீண்டும் தனியார் முகவர் நியமிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டிடம் திறப்புவிழா காணாத நிலை தொடர்கிறது. நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் ரயில்பாதையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. இது எச்ஜி-1 பிரிவு ரயில் நிலையம் ஆகும். பள்ளிவிளையில் உள்ள இந்த ரயில் நிலையத்தின் 2019-20ம் ஆண்டு வருவாய் a2 கோடி 65 லட்சத்த 86 ஆயிரத்து 85 ஆகவும், தினசரி இந்த ரயில் நிலையம் வழியாக சராசரியாக 535 பயணிகள் பயணம் செய்து தினசரி வருவாயாக a72 ஆயிரத்து 839ம் கிடைக்கின்றது.
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி தினசரி ரயில், திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர், ஜாம்நகர், காந்திதாம் செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் நின்று செல்கிறது. இங்கு முன்பதிவு வசதி கிடையாது. சாதாரண முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு மட்டுமே பெறமுடியும். அதற்காக தனியார் முகவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அவர் வந்து பயணச்சீட்டு வழங்குவார். ரயில் புறப்படும்போது பச்சைக்கொடி காட்டும் பணியையும் அவரே கவனித்து வருகிறார். ரயில் நிற்காத நேரங்களில் இந்த நிலையம் மூடப்பட்டிருக்கும்.

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்ற கன்னியாகுமரி  திருவனந்தபுரம் மின்மயமாக்கம் திட்டத்தின் கீழ் உட்படுத்தி செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு திட்ட ஒப்புதல் பெறபட்டது. 2012-ம் ஆண்டு கன்னியாகுமரி -  திருவனந்தபுரம் வழித்தடம் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்று விட்டன. ஆனால் இந்த ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த ரயில் நிலையத்தை 31-03-2010 பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் ஈ.அகமது இந்த ரயில் நிலையம் ஐந்து கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனாலும் பின்னர் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. பல ஆண்டுகளாகவே எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. பின்னர் குமரி மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை இரண்டு ரயில் தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்றி விரிவாக்கம் செய்ய தனித்தனியாக என இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்பட்ட காரணத்தால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது.

பின்னர் பல வருடங்களுக்கு பிறகு ரயில் நிலையத்துக்கு புதிய கட்டிடம் பணிகள் நிறைவுபெற்று திறப்புவிழாவிற்காக தயார்நிலையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் புதிய கட்டிடத்தை திறந்து நிலைய அதிகாரி நியமித்து முன்பதிவில்லாத கணிப்பொறி வசதியுடன் கூடிய பயணசீட்டு கவுண்டரை பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் தனியார் பயணசீட்டு முகவரி நியமிக்க ரயில்வேயால் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘நாகர்கோவில் டவுன் ரயில் நிலைய புதிய கட்டிடம் பயணிகள் பயன்பாட்டிற்காக உடன் திறக்கப்பட மாட்டாது என்றே தெரிகின்றது. இந்த ரயில் நிலையம் வழியாக பயணம் செய்யும் பயணிகள் ஓய்வு அறை, கழிப்பறை, இருக்கைகள், குடிநீர் வசதி போன்ற வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வசதிகள் அனைத்தும் கூடிய புதிய ரயில் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு பயன் இல்லாமல் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையம் தனியார் முகவர் நியமிக்க வேண்டி இதன் தரத்தை என்எஸ்ஜி-5 லிருந்து எச்ஜி-1 பிரிவாக திருவனந்தபுரம் கோட்டம் 2018-ம் ஆண்டே மாற்றிவிட்டது. இவ்வாறு மாற்றம் செய்தால் மட்டுமே இந்த ரயில் நிலையத்தை தனியார் முகவருக்கு கொடுக்க முடியும்.

இந்த ரயில் நிலைய புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து ரயில்வே நிலைய அதிகாரி, கணிப்பொறி பயணசீட்டு ஊழியர் நியமித்து பயணிகள் வசதிக்காக செய்ய வேண்டும். நான்குவழிசாலை இந்த ரயில் நிலையத்திற்கு மறுபக்கம் மிக அருகில் செல்வதால் இந்த ரயில் நிலையத்திலிருந்து புதிய அணுகுசாலை நான்கு வழிசாலைக்கு அமைக்க வேண்டும். இரண்டாவது நுழைவு வாயிலாகவும் ரயில்நிலையத்தின் மறுமார்க்கம் அமைக்க வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள குட்ஸ் ஷெட்டை நாகர்கோவில் டவுண் நிலையத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர். புதிய கட்டிடத்தை திறந்து நிலைய அதிகாரி நியமித்து முன்பதிவில்லாத கணிப்பொறி வசதியுடன் கூடிய பயணசீட்டு கவுண்டரை பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கை.

Tags : agent ,Nagercoil Town Railway Station Building: Railway , Opening Ceremony, Nagercoil, Town Railway Station, Building
× RELATED அபிஷேக் நாமா இயக்கும் மாயாஜால படம் நாகபந்தம்