×

திருவண்ணாமலை நகரில் கடந்த 2017ம் ஆண்டு அறிவித்த திட்டம்: ரூ. 38 கோடியில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைவது எப்போது?

 * முதல்வர் அறிவித்தபடி ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்குமா?

திருவண்ணாமலை: ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் கடந்த 2017ம் ஆண்டு அறிவித்த திட்டமான ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைவது எப்போது? முதல்வர் அறிவித்தபடி ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்குமா? என்று  பொதுமக்களிடையே  கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். ஆனாலும் இந்த நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படவில்லை. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமைலைக்கு வருகை தருகின்றனர்.

 இதனால் திருவண்ணாமலை ஆன்மிக நகராக விளங்கி வருகிறது. ஆனாலும், அவர்களுக்கான போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. மேலும், மாவட்டமாக உருவாகும் முன்பு இருந்த அதே நெரிசலான இடத்திலேயே தொடர்ந்து பஸ் நிலையம் இயங்கி வருகிறது. திருவண்ணாமலை வரும் வெளியூர் பயணிகளுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும், இந்த பஸ் நிலையத்தில் இல்லை. எனவே, திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். ஆனால், தொடர்ந்து இந்த கோரிக்கை கானல் நீராகவே இருந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்றத்தில் அப்போைதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். எனவே, விரைவில் பணிகள் தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான எந்த ஆயத்தப்பணிகளும் தொடராமல், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு பஸ் நிலையம் அமைக்க திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்படி, மாவட்ட நிர்வாகமும், திருவண்ணாமலை நகராட்சியும் இணைந்து, புதிய பஸ் நிலையத்துக்கான திட்ட அறிக்கையையும், உத்தேச தேர்வாக 5 இடங்களையும் குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஸ் நிலையத்துக்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் அப்போது இருந்த கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, புதிய பஸ் நிலைம் அமைக்க ₹30 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்திருந்தார், அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் 16.60 ஏக்கர், கணத்தம்பூண்டியில் 26.36 ஏக்கர், துரிஞ்சாபுரம் அருகே 13.39 ஏக்கர், டான்காப் வளாகத்தில் 8.33 ஏக்கர், மார்க்கெட் கமிட்டியில் 14.50 ஏக்கர் என சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில், பஸ் நிலையம் அமைப்பதன் சாத்தியம் குறித்து கருத்துக்கேட்கப்பட்டது.

 கணத்தம்பூண்டி, டான்காப் வளாகம், மார்க்கெட் கமிட்டி வளாகம் போன்றவற்றில் இணைப்பு சாலைகள் அமைத்தல் போன்ற பணிக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதாலும், டான்காப் வளாகத்தில், கால்நடை தீவன உற்பத்தி மையம் ஏற்படுத்தும் திட்டம் நிலுவையில் இருப்பதாலும் அந்த இடங்கள் தவிர்க்கப்பட்டன. எனவே, அண்ணா நுழைவு வாயில் ஈசான்ய திடலில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டு, மீண்டும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் பணிகள் தொடங்கவில்லை. திருவண்ணாமலையில் தற்போதுள்ள பஸ் நிலையத்தில், ஒரே நேரத்தில் 50 பஸ்கள் மட்டுமே நிறுத்த முடியும். நாளொன்றுக்கு 620 பஸ்கள் 1,913 நடைகள் பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.

எனவே, பஸ் நிலையம் கடும் நெரிசலில் சிக்கித்தவித்து வருகிறது. எனவே, புதியதாக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில், 150 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் மாதிரி வடிவமைப்பு செய்யப்பட்டது. மேலும், அடுத்த 23 ஆண்டுகளுக்கான வளர்ச்சியின் தேவையை அடிப்படையாகக் கொண்டு புதிய பஸ் நிலைய வரைபடம் தயாரிக்கப்பட்டன.ஆனாலும், திட்டமிட்டபடி பணிகள் தொடங்காமல் முடங்கியிருப்பது பொதுமக்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கடந்த 9ம் தேதி கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலையில் தனியார் நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் ₹38 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். பொதுமக்கள் கருத்து அடிப்படையில் இடம் தேர்வு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார். எனவே, முதல்வரின் நேரடி அறிவிப்புக்கு பிறகாவது புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்குமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலால் அவதி
திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் இடநெருக்கடியால் பஸ்கள் உள்ளே சென்று, வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பஸ்நிலையம் மட்டுமின்றி, பஸ் நிலையத்தையொட்டிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகரில் ேபாக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பஸ்நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த புதிய போக்குவரத்து நெரிசலால் அவதி திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் இடநெருக்கடியால் பஸ்கள் உள்ளே சென்று, வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பஸ்நிலையம் மட்டுமின்றி, பஸ் நிலையத்தையொட்டிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே நகரில் ேபாக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பஸ்நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்றத்தில் அப்போைதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்கான எந்த ஆயத்தப்பணிகளும் தொடராமல், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Tags : city ,Thiruvannamalai ,bus stand , The project announced in the year 2017 in Thiruvannamalai city: Rs. When will the 38 crore integrated bus stand be set up?
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை