எட்டு மாதங்களுக்கு பின் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி: கொரோனா பாதிப்பால் முடங்கி போன மலைகளின் அரசியான ஊட்டி எட்டு மாதங்களுக்கு பின் மீண்டு வருகிறது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வது வழக்கம்.  நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமே சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. இங்குள்ள காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்துமே சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளன. சாதாரண தொழிலாளி முதல் முதலாளிகள் வரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளனர். மேலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூலம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் கிைடத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நீலகிரி வருவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதேபோல்், அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால், கடந்த 8 மாதங்களாக பிழைப்புக் கூட வழியில்லாமல் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அதேபோல், மாவட்டத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டது. துவக்கத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது. இதனால், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துச் சென்றனர். தற்போது இ பாஸில் தளர்வு அளிக்கப்பட்டு, இ என்ட்ரி மட்டும் செய்தால் போதுமானது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். அதன்பின், கூட்டம் குறையாமல் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் மீண்டும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூ பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கம் போல் உள்ளது. கடை வீதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. அனைத்து சாலைகளிலும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு காணப்படுகிறது. பூங்கா சாலையில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் திறக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல், மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருவதால், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் 8 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவைகள் சுற்றுலா பயணிகள் செல்ல இதுவரை திறக்கப்படவில்லை. முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி லக்டி டாப் போன்ற சூழல் சுற்றுலா துவக்கப்பட்டால், மேலும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசு துறைகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும் என்பதே தற்போது ஊட்டி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாகன ஓட்டுனர்கள் நிம்மதி

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததாலும், இ பாஸ் முறை அமலில் இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை இருந்தது. அதேபோல், உள்ளூர் மக்களும் வெளியூர் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுநர்கள், டேக்சி ஓட்டுநர்கள் போன்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பலர் வாகனங்களை விற்றுவிட்டு வேறு வேலை தேடி செல்ல ஆரம்பித்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளதாலும், வெளியூர் செல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் சுற்றுலா கார்கள் மற்றும் டேக்சிகள் ஓடத்துவங்கியுள்ளன. இதனால், அவர்களது வாழ்வாதாரமும் 8 மாதங்களுக்கு பின் பிரகாசம் அடைந்துள்ளது.

Related Stories:

>