வடமாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையால் ஆயிரம் கோடி ரூபாய் பட்டாசுகள் தேக்கம்

* மத்தாப்பு தொழிலுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி

* ஆலைகளைத் திறக்க உரிமையாளர்கள் தயக்கம்

* வேலைவாய்ப்பின்றி சிவகாசி தொழிலாளர்கள் பரிதவிப்பு

சிவகாசி: பட்டாசுக்கு வட மாநிலங்களில் தடையால் சுமார் ஆயிரம் கோடி ரூநபாய் பட்டாசுகள் விற்பனையின்றி சிவகாசி குடோன்களில் தேங்கிக் கிடக்கின்றன. இந்த ஆண்டுக்கான ஆர்டர்களை வடமாநில வியாபாாரிகள் வழங்காததால் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாமல் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பரிதவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் உள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். நாட்டின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை சிவகாசியே வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக இத்தொழில் பாதிக்கும் வகையில், பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகிறது. இரு ஆண்டுகள் முன்பு பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் பட்டாசு உற்பத்தி பணியை நிரந்தரமாக தடை விதிக்கக் கோரி கோரிக்கை விடுத்தனர்.

பசுமைப்பட்டாசு!

 உச்ச நீதிமன்றம் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க மறுத்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. தற்போது சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பசுமை பட்டாசுகளே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பட்டாசு ஆலைகள் 90 நாட்கள் மூடப்பட்டன. இதில் பட்டாசு தொழிலாளர்கள் வேலையின்றி அவதியடைந்தனர். பின்னர்  கொரோனா ஊரடங்கு தளர்வால், பட்டாசு ஆலைகள் திறந்து, உற்பத்தி தொடங்கின. கொரோனாவால் ரூ.400 கோடி உற்பத்தி பாதிப்பு இருந்தபோதும், தீபாவளியை எதிர்நோக்கி ஆலைகளில் உற்பத்தி தீவிரமடைந்தது.

வெடிக்கத் தடை...

 தீபாவளி பண்டிகைக்கு 10 தினங்களுக்கு முன்பு  ராஜஸ்தான் மாநிலத்திலும், தொடர்ந்து மேற்கு வங்கம், டில்லி உள்ளிட்ட இடங்களிலும் மாநில முதல்வர்கள் பட்டாசுக்கு தடை விதித்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாட்டில் காற்று மாசு அதிகம் உள்ள 122 நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தது. டில்லி பிராந்திய பகுதியான ஹரியானா, ஒடிஷா, உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்ட மாநிலங்களில் போலீசார்  பட்டாசு விற்பனையாளர்கள் குடோன்கள், கடைகளை சீல் வைத்தனர். இதனால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. வட மாநிலங்களுக்கு அனுப்பிய பட்டாசுகள் விற்பனை ஆகாததால் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசுக்கான பணத்தை வசூலிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தீபாவளி முடிந்து ஒரு சில தினங்களில்  சிவகாசியில் அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி பணியை உரிமையாளர்கள் தொடங்கி விடுவர். ஆனால் இந்த ஆண்டு வடமாநிலங்களில் பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதால் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்களை வியாபாரிகள் வழங்கவில்லை. இதனால் பட்டாசு ஆலைகளை உரிமையாளர்களால் திறக்க முடியவில்லை. 3 மாதம்  கழித்தே திறக்க ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

‘அரசு உதவித்தொகை வேண்டும்’

பட்டாசு லேபிள் தயாரிக்கும் தொழிலாளி  ஆறுமுகசாமி  கூறுகையில், ‘‘20 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் பட்டாசு தொடர்பான அனைத்துத் தொழிலும் பெருமளவில் பாதித்துள்ளது. தினமும் ரூ.350 வரை இத்தொழிலில் வருவாய் கிடைக்கும். தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க படவில்லை. வேலை இன்றி குடும்ப செலவிற்கு பணமின்றி தவித்து வருகிறோம். சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மாற்றுவேலைகளுக்கும் வழியில்லை. பட்டாசு ஆலைகளில் வேலைவாய்ப்பு இல்லாத காலங்களில் அரசு நல வாரியம் அமைத்து பட்டாசு தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும்’’ என்றார்.

‘கடனை அடைக்க அட்வான்ஸ்’

பட்டாசு ஆலை தொழிலாளி சாந்தி கூறுகையில், ‘‘வேலைக்கு வந்தால் தினமும் ரூ.300 வரை கூலி கிடைக்கும். இதனால் குழந்தைகளின் கல்வி, சாப்பாடு தேவையை சாமாளித்தேன். ஒருநாள் வேலை இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாக வேண்டும். கொரோனா ஊரடங்கால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதில் கடன் அதிகமாகி விட்டது. ஆலையில் அட்வான்ஸ் பணம் வாங்கி கடனை அடைத்துள்ளேன். தீபாவளிக்குப்பிறகும் ஆலை திறக்கப்படாதது வேதனையளிக்கிறது’’ என்றார்.

‘எல்லோருமே தவித்து நிற்கிறோம்’

தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கண்ணன் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகைக்கு சிவகாசி பட்டாசுகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பண்டிகை கொண்டாட்டத்தை சிதைக்கும் நோக்கில் பட்டாசுகளை தடை செய்யும் முயற்சிகள் நடக்கிறது. இதனால் இந்த தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சிவகாசியில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி  தற்போது  பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்தொழில் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.  கொரோனா பரவல் காரணமாக 80 சதவீத அளவிற்கே இந்த ஆண்டு உற்பத்தி பணிகள் நடந்தன. டில்லி பிராந்திய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்டாசுகள் குடோன்களில் தேங்கியுள்ளன. இந்த தடை நவ. 30 வரை உள்ளதால் அடுத்த தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வரவில்லை. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து வடமாநில வியாபாரிகள் கொடுக்கும் ஆர்டர்களை வைத்துதான் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆலைகளில் உற்பத்தி பணிகள் நடைபெறும். இந்த தொழிலும், தொழிலாளர்களும் தவித்து நிற்கிறோம்’’ என்றார்.

Related Stories:

>