×

வறட்சி காலங்களில் திண்டாடும் மக்கள் 30 கிராமங்களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு: செஞ்சி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைக்கப்படுமா?

விழுப்புரம் அருகே 30 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், செஞ்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்க வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் இன்றியமையாதது. பூமியில் 70 சதவீதம் உப்புநீராகவும், 30 சதவீதம் நல்லதண்ணீரை மட்டுமே கொண்டு இயங்குகிறது.  தற்போது உயரும் பருவநிலை மாற்றம், காடுகளின் பரப்பு குறைதல், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து வருகிறது.  வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னைதான் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்றும், இதற்காக பல கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும்.  தமிழகத்தின் அதிக கிராமப்புறங்களை கொண்ட விழுப்புரம் மாவட்டம்,  விவசாயிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.  

ஆறுகள், ஏரிகளுக்கு பஞ்சமில்லாத நிலை இருந்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு  தீராத பிரச்னையாக தொடர்கிறது.  விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்னை இருந்து வந்த காலம் மாறி,  தற்போது குடிநீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து  போன பருவமழை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் இருக்கின்ற தண்ணீரையும் சேமிக்க முடியாமல் வீணடித்து பிரச்னையை பூதகரமாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நகர மக்களின் குடிநீர் தாகத்தை தீர்த்து வருகிறது.  நகரங்களை தொடர்ந்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனால், கூட்டு குடிநீர் திட்டத்தை கிராமப்புறங்களில்  செயல்படுத்த வேண்டும், நகரப்பகுதியோடு உள்ள திட்டத்தில் இணைக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

விழுப்புரம் அடுத்த பனமலை, கொசப்பாளையம், அடங்குணம், திருக்குணம், அன்னியூர், பழைய கருவாட்சி, சி.என்.பாளையம், பனமலைப்பேட்டை, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, போரூர், செம்மேடு, ஏழுசொம்பொன், கக்கனூர், அத்தியூர்திருக்கை உள்ளிட்ட சுமார் 30 கிராமங்களில் குடி நீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது.  செஞ்சி நகர மக்களுக்கு கூட்டு  குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில், ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு, குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் குடிநீர் குழாய்கள் 30 கிராமங்களை கடந்து செல்கிறது. அதே நேரத்தில் இதனால் இந்த கிராமங்களுக்கு பயனில்லை. எனவே  பனமலை, அன்னியூர் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடங்களில் பெரிய அளவிலான நீர்த்தேக்க தொட்டி அமைத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.  புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் குழாய் புதைப்பது போன்ற செலவுகள் ஏதும் ஏற்படாது, எளிமையாக கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, செஞ்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தோடு இக்கிராமங்களை இணைக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக
உள்ளது.

30 கிராமங்களை இணைக்க வேண்டும்
பனமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யனார் கூறுகையில்,  மழைக்காலங்களில் நிலத்தடிநீர் உயர்ந்து குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்தசில ஆண்டுகளாக தொடர்ந்து பருவமழை பொய்த்தது, நந்தன்கால்வாய்திட்டம் முழுமை பெறாதது உள்ளிட்ட காரணங்களால் நீர்நிலைகளில் வற்றி, கடும் வறட்சி நிலவிவருகின்றன. 30 கிராமங்களில் குடிநீருக்கு திண்டாடும் நிலை இருக்கிறது. கக்கனூர், ஏழுசெம்பொன் உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களே சொந்த செலவில், டேங்கர் லாரிகள் மூலம் தினசரி தங்களின்  குடிநீர்தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். மற்ற கிராமங்களில் பலகிலோ மீட்டர் தூரம் வயலுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூட்டுக்குடி நீர்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

மக்களின் தேவை தீர்க்க புதிய திட்டம் தேவை
திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா கூறுகையில், அன்னியூர் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள கிராமங்களில் கிணற்று நீரை நம்பியே விவசாயமும், குடிநீர் தேவையும் இருக்கிறது. மழைக்காலத்தில் போதிய அளவு ஏரியில் தண்ணீர் நிரம்பாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கோடைக்காலங்களில் குடிநீருக்கு  அவதிப்படக்கூடிய சூழலில் தவிக்கிறார்கள். 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை இந்தப்பகுதிக்கு ஏற்படுத்தவேண்டும்.
செஞ்சி செல்லும் குழாயில் இணைத்தால் அப்பகுதி  மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே, புதியதிட்டமாக 2வது கூட்டுக்குடிநீர் திட்டமே சாத்தியமாகும். திருக்கோவிலூர் வெகுதொலைவில் உள்ளதால் திட்டமதிப்பீடு அதிகமாகும், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள இந்த கிராமங்களுக்கும், இதே தொகுதியில் 15 கிமீ தொலைவில் உள்ள கல்பட்டு தென்பெண்ணை ஆற்றிலிருந்து குடிநீர் குழாய்கொண்டு வந்து, இந்திட்டத்தை நிறைவேற்றினால் அரசுக்கு செலவும் குறையும், குடிநீர் பிரச்னையும் தீரும், என்றார்.

Tags : drought ,villages , During droughts, in 30 villages, severe, shortage of drinking water
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு