×

புதிய சாலைகள், பாலங்கள், மின் இணைப்புகளுக்கு தடை குமரியில் திட்ட பணிகளுக்கு வனத்துறை முட்டுக்கட்டை: குமுறும் மலைவாழ் கிராம மக்கள்

நாகர்கோவில்: குமரி மலை கிராமங்களில் வனத்துறை போடும் முட்டுக்கட்டையால் வளர்ச்சி பணிகள் தடைபட்டுள்ளன.  யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை குமரியில் இருந்து தான் தொடங்குகிறது. தமிழகத்தில் இதர மாவட்டங்களை ஒப்பிடும் போது குமரி மாவட்டம் சிறிய மாவட்டம் ஆகும். பரப்பளவில் 1,672 சதுர கி.மீ கொண்ட இந்த மாவட்டத்தில் சுமார் 33 சதவீதம் அடர்ந்த காடுகளும், 71 சதுர கி.மீ நீள கடற்கரையும் உள்ளது. மொத்தம் 48 மலை கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் சரிபாதி நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. மக்கள் நெருக்கம் அதிகமான குடியிருப்பு பகுதிகளைக் கொண்டது. ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,119 பேர் வாழ்கின்றனர்.  இங்குள்ள மலைகளில் பல அரிய வகை வன உயிரினங்கள், ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள், தேக்கு, சந்தனம், ஈட்டி மரங்கள் காணப்படுவதுடன் வாசனை பயிர்களும் விளைகின்றன.

இந்நிலையில் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்தில்  குமரி மாவட்டத்தை கொண்டு வந்து அதனை வனத்துறை கட்டுப்பாட்டில் கண்காணிக்கவும், இதற்கான எல்கையை வனத்துறையே ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி பாதுகாக்கப்பட்ட காப்புகாடு பகுதியில் இருந்து 10 கி.மீ சுற்றளவிற்கு வனத்துறை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு இங்கும் பல்வேறு கட்டுபாடுகள்  வனத்துறையால் அமல்படுத்தப்
படும் நிலை உருவானது. குமரி மாவட்டம் மொத்தமே 30 கி.மீ சுற்றளவுக்குள் தான் உள்ளது.  68 மலைக் கிராமங்கள் கொண்ட இந்த மாவட்டத்தில் காப்புக்காடு பாதுகாப்பு அரண் எல்கை அமல்படுத்தப்பட்டால் ஒட்டு மொத்த குமரி மாவட்டமே இந்த வரையறைக்குள் வந்து விடும். இதனால் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. பின்னர் 10 கி.மீ. என்பதை 3 கி.மீ. சுற்றளவு என மாற்றம் செய்யும் வகையில் வரையறைகள் வகுத்தனர். ஆனால் இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஜீரோ பாயிண்ட் என அறிவிக்கப்பட வேண்டும் என்பது குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை ஆகும். இதற்கிடையே புலிகள் சரணாலய பகுதியாகவும் அறிவிப்பு வெளியிட்டு மேலும் அதிர்ச்சி  அளித்தது மத்திய அரசு.

இது போன்ற பிரச்னைகள் காரணமாக, குமரி மாவட்டம் முழுவதுமே வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர். தற்போது சூழியல் அதிர்வு தாங்கு மண்டலத்ைத காரணம் காட்டி மலை கிராமங்களில் நடக்க வேண்டிய சாலை பணிகள், மின் இணைப்பு பணிகள், பாலம் அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. வனத்துறை அனுமதியின்றி மலை கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த வீடுகளை  புதுப்பிக்கவோ, புதிய வீடுகள் கட்டவோ, விற்பனை செய்யவோ எதுவும் கூடாது என்பதும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஏதாவது செய்வதாக இருந்தால் வனத்துறை தடையின்மை சான்று அவசியமாகிறது. அரசு பணிகளுக்கே தடையின்ைம சான்று கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் வனத்துறை, தனியார்களுக்கு எப்படி தடையின்மை சான்று வழங்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
முழுக்க, முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், வனத்துறை அதிகாரிகள் தனி காட்டு ராஜாவாக வலம் வருகிறார்கள். கட்டுப்படுத்த யாரும் இல்லை. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற எண்ணத்தில் வனத்துறை பொதுமக்களிடம் பல்வேறு அத்துமீறல்கள், மிரட்டல்களை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வனத்துறையின் கெடுபிடியால், குமரி மலை கிராமங்களில் பல கோடிக்கணக்கான ரூபாய்  மதிப்பிலான திட்ட பணிகள் முடங்கி கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரிப்பாறை சப்பாத்து பாலம் கடந்த ஓகியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அங்கு ரூ.1 கோடியில் புதிய பாலம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இந்த பணியை தொடங்க தற்போது வனத்துறை என்.ஓ.சி. (தடையின்மை சான்று) அவசியமாகிறது. வனத்துறை தடையின்மை சான்று  கொடுத்தால், இதற்கான நிதி வனத்துறைக்கு வரும். வனத்துறை தான் அந்த நிதியை பாலம் கட்டுவதாக இருந்தால் நெடுஞ்சாலைத்துறைக்கோ, பொதுப்பணித்துறைக்கோ மாற்றம் செய்ய வேண்டும். இதே போல் அரசு ரப்பர் கழகம் தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய பாலம் கருமேணியாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது மூடப்படும். எனவே இங்கு புதிய பாலம் அமைக்க பொதுப்பணித்துறைக்கு வனத்துறை அனுமதி அவசியமாகிறது.

 இதே போல் மலை கிராமமான தடிக்காரன்கோணம் - கீரிப்பாறை சாலையை செப்பனிடவும் வனத்துறை அனுமதி கொடுக்க வில்லை. குமரி மாவட்டத்தில் பேக்கேஜ் சிஸ்டத்தின் கீழ், ரூ.6 கோடியில் பல்வேறு சாலைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இதில் தடிக்காரன்கோணம் - கீரிப்பாறை சாலைக்கும் சுமார் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் வனத்துறை சோதனை சாவடியும் வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என கூறி, சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதி கொடுக்காமல் உள்ளனர்.  குமரி மாவட்ட மக்கள் தங்களின் அன்றாட தேவையான வீடு கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கு சோதனை சாவடிகளில் வனத்துறை தடை விதித்துள்ளது. மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் விளை நிலங்களில் உள்ள முதிர்ந்த ரப்பர் மற்றும் மா மரம், கொல்லா, அல்பீசியா போன்ற மரங்களை முறித்து அப்புறப்படுத்த வனத்துறை அனுமதிப்பது இல்லை. ஜேசிபி, கிட்டாச்சி இயந்திரங்களை வன பகுதிக்குள் பயன்படுத்த கூடாது.

பிற மாவட்டங்களில், மாநிலங்களில் வனத்தில்  இருந்து நகர்ப்புறம் வெகு தொலைவில் இருக்கும். ஆனால், குமரியில் ஒட்டு மொத்த மாவட்டமும் இந்த எல்லை வரன்முறைக்குள் வந்து விடும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்தது. வனத்துறையை கண்டித்து போராட்டங்களும் தொடங்கி உள்ளன என்பது நினைவு கூறத்தக்கது. இந்த பிரச்னை குறித்து வனத்துறை  அதிகாரிகளிடம் கேட்ட போது, கட்டுப்பாடுகள், வரையறைகளை வனத்துறை செய்வது  இல்லை. மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் அறிவிப்பாணையை நாங்கள்  நடைமுறைப்படுத்துகிறோம். சாலை அமைக்க மத்திய அரசின் அனுமதி தேவை என தெளிவாக  குறிப்பிட்டுள்ளனர். அதற்கான அனுமதி கடிதம் விரைவில் கிடைக்கும் என்றனர்.

முதலமைச்சர்களின் திட்டத்துக்கே தடை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காளிகேசத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க உத்தரவிட்டார். இதே போல் மறைந்த கலைஞர், முதலமைச்சராக இருந்த போது காளிகேசத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா விடுதிகள் உள்ளிட்டவை அமைக்க உத்தரவிட்டார். ஆனால் அப்போது இருந்தே வனத்துறை, முட்டுக்கட்டை போட்டு வருகிறது. காவல்துறையில் தொடங்கி நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் மோதுகிறது.

போராட்டம் தொடரும்
மலைவாழ் பழங்குடியினர் மறுமலர்ச்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் முருகன் கூறுகையில், பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அமுல்படுத்தி வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் பழங்குடி கிராமங்களில் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது. இத்தடையை நீக்கி 2006 ன்  வன உரிமை, சமூக உரிமை போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.

சானல் கரையை கைப்பற்ற வனத்துறை திட்டம்
 அதிக பாதிப்பு கொண்ட தோவாளை தாலுகாவில் தோவாளை கால்வாய் மற்றும் அனந்தனாறு கால்வாயை எல்லையாக கொண்டு புதிய எல்கை வரையறை செய்யப்பட்டு, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கடந்த 22.09.2020  அன்று தமிழகம் முழுவதும் 10 கி.மீ என்பதற்கு பதில் 1 முதல் 3 கி.மீ வரை சூழியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு வரும் போது சானல்கரை பகுதிகள் முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும். செங்கல் சூளைக்கு கூட மண் எடுக்க முடியாது.

17 வருவாய் கிராமங்கள்
கடையல், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளகோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டியபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குமாரபுரம் ஆகிய வருவாய் கிராமங்கள் சூழலியல் அதிர்வு  தாங்கு மண்டலத்தில் வருகின்றன. இந்த கிராமங்களில் தான் தற்போது பெரும் பாதிப்பு உண்டாகி உள்ளது.


Tags : roads ,bridges ,Forest Department ,hill villagers ,Kumurum ,Kumari , New roads, bridges, electrical connections, barricades, culverts, barricades
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...