×

ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தையில் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு: கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை கிராமத்திற்கு செல்லும் சாலையானது மண்சரிவு ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதை உடனடியாக சீரமைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி நிவர் புயலால் பெய்த கனமழையால் மலைகிராமங்களுக்கு செல்லும் பாதையில், மண்சரிவு ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாதபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 30 கிராமங்களிலும் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பாதைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாங்கள் கூலித்தொழில் செய்தால் மட்டுமே தினமும் சாப்பிட முடியும். எங்களால் முடிந்த அளவிற்கு உழைத்து, சிறிய வீடுகளை கட்டி உள்ளோம். இந்த வீடுகளும், இயற்கை சீற்றங்களால் சீரழிந்துவிடுகிறது. அதிகாரிகள் யாரும் இதுவரை இப்பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை. அதிகாரிகள் வருவதற்கு கூட வழியில்லாமல் உள்ளது. இதனால் மலைப்பாதையில் கஷ்டப்பட்டு பயணித்து வருகிறோம்.
இதற்கு முன்பு பலமுறை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வந்து பார்வையிட்டு உடனடியாக சீரமைத்து தருவதாக கூறி சென்றனர். ஆனால் மலையை விட்டு கீழே சென்றதும் இதனைப்பற்றி மறந்துவிடுகின்றனர். இதேபோல் இருந்தால் வரும் தேர்தலில் யாரும் வாக்களிக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : villages ,Odugathur , Heavy rain, landslides, landslides in Odugathur, Peenchamandai
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை