வங்கதேச டூருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வெஸ்ட் இண்டீஸ் குழு ஆய்வு

டாக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகளிலும், 2 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த டூருக்கான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வெஸ்ட் இண்டீஸ் குழுவினர் ஆய்வு செய்தனர். கொரோனா பீதிக்கு பிறகு வங்கதேச அணி மார்ச் முதல் எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீசுடன்தான் முதல்முறையாக விளையாட உள்ளது. தற்போது நியூசிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜனவரியில் வங்கதேசம் செல்லும். இந்த தொடருக்குப் பின்னர் வங்கதேச அணி மார்ச் மாதம் நியூசிலாந்து செல்கிறது.

கொரோனா பீதி காரணமாக வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான போட்டிகள், ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடக்க உள்ளன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2 பேர் கொண்ட குழுவை வங்கதேசம் அனுப்பியுள்ளது. அந்தக் குழுவினர் நேற்று வங்கதேச தலைநகர் டாக்கா போய் சேர்ந்தனர். அவர்கள், வங்கதேச கிரிக்கெட் வாரியம் செய்துள்ள கொரோனா பரவல் தடுப்பு மற்றும் வீரர்களுக்கான ‘பயோ பபுள்’ பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். போட்டிகள் நடைபெற உள்ள சிட்டகாங் நகருக்கும் செல்கின்றனர். அதற்காக டிச.3ம் தேதி வரை வங்கதேசத்தில் தங்க உள்ளனர். இக்குழுவினர் அறிக்கையை பொறுத்து வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும். நீண்ட நாட்கள் ‘பயோ பபுள்’ கண்காணிப்பில் இருப்பது வீரர்களை பாதிக்கும் என்பதால்  டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>