ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நெல்லை-தாம்பரம் இடையே ரயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை: ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நெல்லை-தாம்பரம் வாராந்திர ரயில் இயக்கப்படுமா என்று ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக மறுநாள் காலையில் 8.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும் வகையில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அப்போது, இந்த சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டன.

தற்போது, ஊரடங்கு தளர்வு மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் நெல்லை, தென்காசி பகுதியை சேர்ந்த மக்கள் அதிக பணம் செலவு  செய்து நெல்லை அல்லது தென்காசி ரயில்நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தான் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்கியது. இந்த வழித்தடத்தில் சேரன்மகாதேவி, அம்பை, கடையம் மற்றும் பாவூர்சத்திரம் மிக முக்கிய ஊர்களும் அமைந்துள்ளது.

மேலும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் சென்னைக்கு வரவும் வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த சிறப்பு ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள், ரயில் பயணிகள் சங்கம், தென்காசி மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ரயில்வே துறைக்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த ரயில்கள் இயக்கப்படாமலே உள்ளது. எனவே இந்த நெல்லை- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>