×

நீர்வழித்தடங்கள், நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து சென்னையில் 10 லட்சம் கட்டிடங்கள்: கரன்சி பெற்று அனுமதி கொடுக்கும் அதிகாரிகள்; 2015 வெள்ளத்துக்கு பிறகு 26,000 குடும்பங்கள் அகற்றம்; 2021 பருவமழைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியிருப்புகள் முழ்கும்

சென்னை: நீர்வழித்தடங்கள், வரத்துகால்வாய்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 10 லட்சம் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழை மற்றும் வெள்ளக்காலங்களில் ஆறு, நீர்வழித்தடங்களில் செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. எதிர்வரும் பருவமழை காலத்துக்குள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சென்னை மாநகர் மழை நீரில் முழ்கும் நிலை ஏற்படும் என்று நீரியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், பாடிகுப்பம் கால்வாய், நந்தனம் கால்வாய் உட்பட, 30 நீர்வழித்தடங்கள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 129 குளங்கள் உள்ளன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியை ஓட்டி 120க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நீர்நிலைகள் மற்றும் அரசு இடங்களை ஆக்கிரமித்து பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் முளைத்து கொண்டே போகிறது. இதனால், ஒரு காலத்தில் சென்னையில் இருந்த 400 சிறிய ஏரிகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்பு போக  தற்போது 28 ஏரி, குளங்கள் மட்டுமே உள்ளது. 370க்கும் மேற்பட்ட இடங்களில் ஏரி, குளங்கள் இருந்த தடம் தெரியாமல் கட்டிடங்களாக மாறியுள்ளன. நீர்வழித்தடங்கள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களால் தான் 2015ம் ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளம் புரட்டி எடுத்தது. ஆற்றிலும் கால்வாயிலும் போக வேண்டிய வெள்ளம் மற்றும் மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்களை அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து விரட்டியது. ஆனால் இதில் பணம் பார்த்த அதிகாரிகள் தப்பிவிட்டனர்.

இதில், ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு சில மாதங்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தது. ஆனால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்ற உத்தரவிட்டனர். ஆனால், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் வசிக்கும் 26 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பாளராக கருதி அங்கிருந்து அகற்றப்பட்டனர். அவர்களுக்கு அரசு சார்பில் கட்டி தரப்பட்ட குடியிருப்புகளில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதே நேரத்தில், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள், தனியார் நிறுவன கட்டிடங்கள் அகற்றப்படவில்லை. குறிப்பாக, இது போன்று சென்னையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், செம்பாக்கம், ரெட்டேரி, அனகாபுரத்தூர், பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையால் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டாமல் நீர்வழிப்பாதை, நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள் அருகே கட்டிடங்களுக்கு அனுமதி தராமல் இருக்க வேண்டும்.
 
இது குறித்து நீரியல் வல்லுனர்கள் கூறியதாவது: மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கால்வாய்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களுக்கு அந்த துறைகளே தடையில்லா சான்று பெற வேண்டும். ஆனால் நீர்நிலைப்பகுதிகளில் தான் கட்டிடம் கட்ட அனுமதி தருகின்றனர். இது எப்படி என்றே தெரியவில்லை. பெரும்பாலும், சென்னை அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் தான் உள்ளது. இதனால் தான், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இப்பிரச்னையால் தான் தற்போது பொதுப்பணித்துறை சார்பில் நீர்வழிப்பாதை அருகே கட்டப்படும் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று தர பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சான்றுகள் எங்கே?
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களுக்கு அந்த துறைகளே தடையில்லா சான்று பெற வேண்டும். ஆனால் இடைத்தரகர்கள் உதவியுடன் கட்டிடம் கட்ட சான்றுகள் வாங்கப்படுவதால், இந்த சான்றுகளை யாரும் கண்டுகொள்வில்லை.

* 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை
சென்னை மாநகரின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் (830 மில்லியன் லிட்டர்). தற்போது சென்னை மாநகருக்கு 65 கோடி லிட்டர் விநியோகப்பட்டு வருகிறது. 200 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 180 மில்லியன் லிட்டர் வீராணம் ஏரி, 170 மில்லியன் லிட்டர் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிமூலம் கிடைக்கிறது. 65 மில்லியன் லிட்டர் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம். கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து 10 மில்லியன் லிட்டர்.

* 200 ஏக்கரில் இருந்து 50 ஏக்கருக்கு கீழ் சுருங்கிய புறநகரில் உள்ள 31 ஏரிகள் பட்டியல்
சென்னை அருகே வேளச்சேரி ஏரி, நங்கநல்லுார் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, உள்ளகரம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, திரிசூலம் ஏரி, மீனம்பாக்கம் ஏரி, மூவரசம்பட்டு ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, கோவிலம்பாக்கம் தாங்கல், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை அணை ஏரி, பள்ளிக்கரணை சித்தேரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மேடவாக்கம் ஏரி, ஜல்லடியன்பேட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, அரசன்கழனி ஏரி, அரசன்கழனி தாங்கல், சித்தாலப்பாக்கம் ஏரி, சோழிங்கநல்லுார் ஏரி, சித்தேரி, ஒட்டியம்பாக்கம் ஏரி, நாவலுார் ஏரி, அகரம் தென் ஏரி ஆகிய 31 ஏரிகள் உள்ளது. இதில் பெரும்பாலானவை 200 ஏக்கரில் இருந்தவை. தற்போது 50 ஏக்கருக்கு கீழ் சுருங்கியுள்ளது.

* ஏரியில் உருவான குடியிருப்புகள்
சென்னையில் 1906-ம் ஆண்டு கணக்கீட்டின்படி ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன. இதுபோக சிறு குளங்கள் அதிகமாக இருந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அதுவே 43 ஆக குறைந்துள்ளது. தற்போது அதிலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர்நிலைகளை காணவில்லை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் ஏரியில் 9 ஆயிரம் குடியிருப்பு, வேளச்சேரி ஏரியில் 1250 குடியிருப்பு, அயனம்பாக்கம்ஏரியில் 2,500 குடியிருப்பு, கோட்டூர் ஏரியில் 900 குடியிருப்புகள் என மொத்தம் 29 ஏரிகளில் 26 ஆயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

* 26,000 மட்டும் அகற்றம்
2015 ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு 26 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே நீர்வழிப்பாதையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. எனினும் பல ஆயிரம் கட்டிடங்கள் அதிகாரிகள் ஒத்துழைப்புடன்  அப்படியே இருக்கின்றன.

* 1189 சதுர கி.மீ பரப்பளவு
சென்னை மாநகராட்சி பகுதிகள், 4 மாவட்டங்களை உள்ளிடக்கியது. 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 ஊராட்சிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. சென்னை மாநகர பரப்பின் மொத்த பரப்பளவு 1189 சதுர கி.மீ ஆகும். இதில் தற்போதைய மக்கள் தொகை 80 லட்சம் பேர். வருகிற 2026ல் மக்கள்தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* லஞ்சத்தால் 500 மீட்டர் இடைவெளி மாயம்?
சென்னையில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பல கட்டிடங்களை அகற்ற முடியாத நிலை உள்ளது. இனி வருங்காலங்களில் நீர்வழிப்பாதைகள், நீர்நிலைகளில் 500 மீட்டர் இடைவெளிக்குள் புதிதாக கட்டிடங்கள் கட்டப்படும் பட்சத்தில் பொதுப்பணித்துறையிடம் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும் என்று மாநகராட்சி, சிஎம்டிஏ, டிடிசிபி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதியது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெரும்பாலும் தடையில்லா சான்று கேட்டு பொதுப்பணித்துறைக்கு அனுப்புவதில்லை. மாறாக, உள்ளாட்சி அமைப்புகளே கட்டிடங்களுக்கு அனுமதி தருகிறது. மேலும், சிஎம்டிஏ, டிடிசிபி சார்பில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தாலும், அதிகாரிகள் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு சான்று தருவதாக தெரிகிறது. நீர்நிலைப்பகுதிகளில் தான் கட்டிடம் கட்ட அனுமதி தருகின்றனர். இது எப்படி என்றே தெரியவில்லை.


Tags : buildings ,Apartments ,Chennai ,waterways ,watersheds ,families ,floods , 10 lakh buildings in Chennai occupying waterways and watersheds: currency issuing permitting authorities; 26,000 families evacuated after 2015 floods; Apartments will be flooded if no action is taken by the 2021 monsoon
× RELATED உரிய ஆவணமில்லாத ரூ.68 ஆயிரம் பறிமுதல்