×

இளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

அண்ணாநகர்: இளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாதவரத்தை சேர்ந்த வின்சென்ட் (50), சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், இந்து அமைப்பின் தலைவர் ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக இவருக்கு கைத்துப்பாக்கி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவர் அடிக்கடி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது, அங்கு தலைமை சமையலராக பணிபுரியும் நேபாளத்தை சேர்ந்த லிமா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் கேள். செய்கிறேன், என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி லிமாவுக்கும், அதே ஓட்டலில் ஊழியராக பணிபுரியும் அக்ரமுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஓட்டல் நிர்வாகம் விசாரித்த போது, லிமா மீது தவறு இருப்பதும், அவர் சரிவர வேலை செய்வதில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டல் நிர்வாகம் லிமாவை வேலையை விட்டு நீக்கி உள்ளது. இதனால், அக்ரமை பழிவாங்க நினைத்த லிமா, போலீஸ்காரர் வின்சென்டிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்த வின்சென்ட், அக்ரமிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, அக்ரம் நெற்றியில் வைத்து சுட்டு கொன்று விடுவேன், என  மிரட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பின்னர், ஓட்டல் மேலாளர் சபரிக்கு போன் செய்து, பணி நீக்கம் செய்யப்பட்ட லிமாவை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என மிரட்டுவது போல் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி மேலாளர் சபரி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று முன்தினம் வின்சென்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர், ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, கடந்த 2003ம் ஆண்டு முதல் சென்னை காவல் துறையில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது. ஓட்டல் மேலாளர் சபரிக்கு போன் செய்த காவலர் வின்சென்ட், பணி நீக்கம் செய்யப்பட்ட லிமாவை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என
மிரட்டி உள்ளார்.

Tags : policeman ,hotel employee , The policeman who threatened the hotel employee at gunpoint has been suspended
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...