×

7வது ஊதியக்குழு பரிந்துரையில் குளறுபடி பொறியாளர்களுக்கு ரூ.17,000 வரை ஊதியம் குறைப்பு: அரசாணையில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை;பொறியாளர்கள் கொதிப்பு; முதல்வர் தலையிட வலியுறுத்தல்

சென்னை: 7வது ஊதிய குழுவின் பரிந்துரையால் ரூ.17 ஆயிரம் ஊதியம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அரசாணையில் குறிப்பிட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை என்று பொறியாளர்கள் கொந்தளித்துள்ளனர். தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதிய குழுவின் போது அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அடிப்படை தர ஊதியம் ரூ.15,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஜூலை 22ம் தேதி அடிப்படை தர ஊதியத்தை ரூ.9300 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைய எதிர்த்து உச்சநீமன்றத்தில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் போடப்பட்ட அரசாணைக்கு தடை விதித்தது. இதனால், மீண்டும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு நிர்ணயித்த ஊதியம் தரப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 7வது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் கடந்த 2013 அரசாணையின் போது அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது உதவி பொறியாளர்களுக்கு 9300-34800+5100ம், உதவி செயற்பொறியாளர்களுக்கு 15,600-39100+5400, செயற்பொறியாளர்களுக்கு 15600-39100+6600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், உதவி பொறியாளர்களுக்கு மட்டும் ஊதிய விகிதம் பல மடங்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு உதவி பொறியாளர்களும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் ஊதியக் குறைப்பிற்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் உண்மைக்கு மாறானவை என்று பொறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்று சொல்லிக்கொண்டே பொறியாளர்களுக்கு ஊதியத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.

மத்திய அரசில், உதவிப் பொறியாளர் டிப்ளமோ தகுதிப் பெற்றவர். ஆனால் தமிழக அரசில் உதவிப் பொறியாளர் பிஇ படித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு நேரடி பணி நியமனம் பெறுபவர். மத்திய அரசில் பணி புரியும் உதவிப் பொறியாளர் பதவிக்கும் தமிழ்நாடு அரசில் பணி புரியும் உதவிப் பொறியாளர் பதவிக்கும் வெறும் பெயரளவில் மட்டுமே ஒற்றுமை இருக்கும்போது, இரு பதவிகளும் ஒன்று என்று ஒப்பிடுவது சரியல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குறைதீர் குழுவிடம் பொறியாளர்களின் கோரிக்கைக்கு அடிப்படையாக வைக்கப்பட்ட காரணங்கள் அனைத்தும் எந்த விளக்கமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் முதல்வர் இந்த ஊதிய பிரச்னை தொடர்பாக பேசி ஒரு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chief Minister , Salary reduction up to Rs. 17,000 for mess engineers in 7th pay panel recommendation: Reasons stated in Government are untrue; Engineers boil; Urging the Chief Minister to intervene
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...