×

முறையான கட்டமைப்பு எதுவும் இல்லாததால் புயல் கரையை கடந்து 4 நாளாகியும் வெள்ளத்தில் தத்தளிக்கும் புறநகர்: மின்சாரம் இல்லாததால் இருள் சூழ்ந்தது; நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் நிவர் புயல் கரையை கடந்து 4 நாள் ஆகியும் சென்னையில் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். எனவே இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் புறநகர் பகுதிகளில் பகுதிகளில் பல இடங்கள் வெள்ளத்தில் முழ்கியது. இதன்படி வேளச்சேரி ராம் நகர், முடிச்சூர் வரதராஜபுரம் தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதியில் வெள்ளம் தேங்கியது.

குறிப்பாக தாம்பரம் அருகே உள்ள சமத்துவப் பெரியார் நகர் பகுதியில் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து குடியிருப்பு வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்கள் ஆன பின்னரும் இதுவரை எந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்யவில்லை. மேலும் இப்பகுதியில் 3 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதைப்போல முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதி வீடுகளில் இருந்து வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது.

மேலும் பள்ளிக்கரணை, சாய் பாலாஜி நகரில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பலமுறை கோரிக்கை வைத்தும் தண்ணீர் செல்ல நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் தரமணி தந்தை பெரியார் நகர், பாரதி நகர் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் காலி நிலப்பரப்பில் தேங்கியுள்ள தண்ணீர் குடியிருப்பு பகுதியில் வந்து விடுவது தான் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து இதே நிலை நீடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளர்.

முடிச்சூர் அடுத்த ராயப்பா நகர், விஜய் நகர், மஞ்சு பவுண்டேசன், அமுதம் நகர், சுந்தர் நகர், செல்வா நகர், ராஜிவ் நகர், பாலாஜி நகர், ஜெகதீஷ்வர் நகர், விமல் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட 20 நகர்களில் ஊரக வளர்ச்சி துறையினர் கடந்த 15 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய், சாலை, சிறு பாலம் கட்டுதல் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதனால் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையில் மேற்கண்ட நகர்களில் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் தற்போதும் இந்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நீர் மூன்று நாட்களாக வெளியேற்றப்படவில்லை.

இதைத்தவிர்த்து செம்மஞ்சேரி சுனாமி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, எழில் முக நகர், ஜவஹர் நகர், சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்தது. இதற்கு முக்கிய காரணம் செம்மஞ்சேரி இரட்டை குட்டை தாங்கல் ஏரி, ராஜீவ்காந்தி சாலையில் சோழிங்கநல்லூரில் உள்ள தாமரைக்கேணி ஏரி ஆகியவை தூர்வாரப்படாமல் உள்ளதுதான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு நிவர் புயல் சென்னையில் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்வதால் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மாடியில் தஞ்சம் அடைந்தனர். இவர்களில் பலர் மூன்று நாட்களுக்கு மேல் உணவு கிடைக்காமல் அவதிபட்டனர். குறிப்பாக இந்த பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. பெரும்பலான பகுதிகளில் இதுவரை மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வாறு 3 நாட்கள் ஆகியும் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதற்கு அரசும் அதிகாரிகளும்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக முன்னெச்சரிக்கை பணிகளை அரசு முறையாக எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மழை வரும் போது சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் சிக்குவது தொடர் கதையாகி வரும் நிலையில் இந்த முறை அதை தடுக்க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த பகுதியில் மழைநீர் வடிகால் பணியை முறையாக செய்யவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி வரும் காலங்களில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து புயல் சின்னம் உருவாகி வரும் நிலையில் இதற்கு மேல் தண்ணீர் தேங்காமல் இருக்க இடைக்காலம் ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Suburbs ,storm ,border , Suburbs submerged in floodwaters for 4 days after storm crossed the border due to lack of proper infrastructure: Darkness surrounded by lack of electricity; Public demand for a permanent solution
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது