திருமங்கலம் பகுதியில் மழைக்கு கடை, வீடுகள் இடிந்தன

திருமங்கலம்: திருமங்கலம் நகரில் நேற்று பெய்த கனமழைக்கு பெரியகடை வீதியில் உள்ள கடை இடிந்து விழுந்தது. அலப்பலசேரியில் நான்கு வீடுகள் இடிந்தன. மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகளவாக திருமங்கலத்தில் 64.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. 23.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நேற்று பெய்த மழையால் திருமங்கலம் பெரியகடை வீதியில் பழமையான கடை ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்த கடை கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை. கடை இடிந்து விழுந்ததால் கடையின் முன்பு நின்றிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. இதேபோல் திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த முத்துமாரி, மச்சக்காளை, பொய்யாமலை, பாண்டி ஆகியோருக்கு சொந்தமான மண் வீடுகள் இடிந்து விழுந்தன. சேத மதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர். தொடர்மழை திருமங்கலம் பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>