×

இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை : உலக நாடுகள் அதிர்ச்சி

தெஹ்ரான், : இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்களின் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரானின் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மேற்கு ஆசியாவில் போர் மேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரான் நாட்டின் ‘அணுகுண்டு திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் உயர்மட்ட விஞ்ஞானி மொஹ்சின் ஃபக்ரிசாதே, நாட்டின் தலைநகரான தெஹ்ரான் அடுத்த அப்சார்ட் நகர் வழியாக (இந்திய நேரப்படி நேற்றிரவு) காரில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது காரை வழிமறித்த கும்பல் ஒன்று, மொஹ்சின் ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் காருக்குள் இருந்த அவரையும் சுட்டுக் கொன்றது.

அவரது கார், துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் மொஹ்சினுடன் இருந்த 3 முதல் 4 பேர் இறந்துள்ளதாக ஃபார் நியூஸ்  தெரிவித்துள்ளது. இந்த படுகொலை சம்பவத்திற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஈரான் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் தனது டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாதிகள் இன்று ஈரானிய பிரபல விஞ்ஞானியைக் கொன்றனர். இந்த மோசமான செயல் சதிகாரர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவத்தில் இஸ்ரேலின் பங்குள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஈரானிய குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. முன்னதாக அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுடன் பன்முக ஒப்பந்தத்தில் மீண்டும் சேர தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன் விரும்புவதாக தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் சவுதி அரேபியா இளவரசர் ஆகியோர் ரகசிய சந்திப்பை நடத்திய இந்த நேரத்தில் விஞ்ஞானி படுகொலை நடந்துள்ளது.

இதனால், மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஈரானின் அணு ஆயுத திட்டங்களான ‘அமத்’ அல்லது ‘ஹோப்’ ஆகியவற்றை மொஹ்சின் வழிநடத்தியதாக கூறப்படுகிறது. மொஹ்சின் ஃபக்ரிசாதே 1989ம் ஆண்டு முதல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் ‘இலக்காக’ இருந்தார். சம்பவம் குறித்து ஈரானின் உயர்மட்ட நிர்வாக தலைவர் அயதுல்லா அலி கமானியின் ராணுவ ஆலோசகர் கூறுகையில், ‘இந்த படுகொலைக்கு நாங்கள் பழிவாங்குவோம். டிரம்பின் கடைசி நாட்களில், ஈரானுடனான போரைத் தூண்டுவதில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது’ என்றார்.


Tags : scientist ,Iran ,meeting ,Israeli ,US ,world nations ,Saudi ,leaders , Israel, US, Saudi leaders, Iran, nuclear, scientist, shot dead
× RELATED ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில்...