×

விருதுநகரில் பரிதாப நிலையில் கிடக்கும் பாவாலி சாலை பணி: துரிதப்படுத்த கோரிக்கை

விருதுநகர்: விருதுநகரில் ஓராண்டிற்கும் மேல் கிடப்பில் கிடக்கும் பாவாலி சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் பழைய பஸ்நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து வரும் பஸ்களும், விருதுநகருக்குள் வந்து மதுரை செல்லும் பஸ்களும் டிடிகே சாலையில் இருந்து பாவாலி சாலை வழியாக மீனாம்பிகை பங்களா வழியாக பழைய பஸ்நிலையம் சென்று வந்தன. பாவாலி சாலையில் மின்வாரியத்தை ஒட்டிய வாறுகால் பாலம் அமைத்து சுமார் 100 மீ தூரம் சாலை அமைக்கும் பணிக்காக 2019ல் சாலை மூடப்பட்டது. மந்த கதியில் நடந்த வாறுகால் பாலப்பணி முடிந்து 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் சாலை அமைக்கும் பணி வேகம் பெறவில்லை.

மேலும் சாலையில் இருந்த பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழிகளை உயர்த்திய நிலையிலும் சாலை பணி துவங்கவில்லை. இதனால் சாலையில் கொட்டிய சரள் கற்கள் தற்போது இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம்பார்த்து வருகின்றன. இதனால் பாவாலி சாலை வழி செல்லும் வாகனங்கள், மின்வாரிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், மின்வாரிய கார்கள், லாரிகள் செல்வதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் சாலை பணிகளை துரித்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Virudhunagar , In Virudhunagar, in pathetic condition, Pavali Road, work
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...