×

உயிரை பணயம் வைத்து சாகசம் அந்தரத்தில் மின்கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய ஊழியர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கும்பகோணம் : நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்தது. அதேபோல் ஆடுதுறை- திருமாந்துறை இடையே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்து கிடந்தது. இந்த மூங்கில் மரங்களை அகற்ற மின்வாரிய துறையினர் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கதிராமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சூரியனார்கோவில் கிராமத்தை சேர்ந்த கள உதவியாளர் உலகநாதன் (44) என்பவர் நேற்றுமுன்தினம் மின்கம்பத்தில் ஏறினார். உயரழுத்த மின் கம்பிகளில் 80 அடி தூரம் நடந்து சென்று மூங்கில் மரக்கிளைகளை வெட்டி அகற்றினார். மீண்டும் மின் கம்பிகளிலேயே நடந்து வந்து கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.

இந்த செயலை கிராம மக்கள் சிலர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது: எனக்கு சிறுவயது முதலே எலக்ட்ரானிக் பொருட்களின் மீது தான் ஆர்வம். நான் 9ம் வரை படித்திருந்தேன். கடந்த 22ஆண்டுகளாக மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறேன். புயல் நேரத்தில் மின்கம்பிகளில் மரங்கள், கிளைகள் சிக்கி இருந்ததால் இப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதை அறிந்த நான் அந்த பகுதியில் மீட்பு பணியில் இருந்தபோது மின் கம்பிகளுக்கு இடையே சிக்கியிருந்த மரத்தை அகற்றினேன் என்றார்.

Tags : Risk of life, adventure, power line, employee
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...