3 குட்டிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய நாய் : தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

செய்யாறு: செய்யாற்று வெள்ளத்தில் 3 குட்டிகளுடன் சிக்கி தவித்த நாயை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். நிவர் புயலால், திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு செய்யாற்றில் நேற்று காலை 6 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் செய்யாற்றின் பாலத்தில் நின்று பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் ஆற்றுப்பாலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தண்டரை அணைக்கட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. செய்யாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆற்று பாலத்தின் கீழே மேடான பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நாய் ஒன்று 3 குட்டிகளை பிரசவித்துள்ளது. ஆனால், அவைகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் நாய் தனது குட்டிகளுடன் வெளியேற முடியாமல் தவித்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சந்திரசேகர், மணி உட்பட  6 பேர் விரைந்து வந்து, பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கி, 3 குட்டிகளுடன் நாயை மீட்டனர். ஆபத்தில் சிக்கிய நாய்களுக்கு உதவிய தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அதேபோல் வேலூர் பழைய பாலாறு பாலத்தின் அடியில்  நாய் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 குட்டிகளை ஈன்று பாதுகாத்து  வந்தது. இந்நிலையில் நேற்று காலை திடீரென வேலூர் பாலாற்றில் வெள்ளம்  பாய்ந்தோடியது. இதில் வெள்ளம் வருவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாய்,  அங்கிருந்த மற்றொரு நாயுடன் சேர்ந்து 8 குட்டிகளையும் ஒவ்வொன்றாக வாயில்  கவ்விக்கொண்டு கரை சேர்த்தது. அதில் கடைசி குட்டியை வாயில்  கவ்வியபடி நாய் தூக்கி வரும்போது, சிறிது தூரத்திற்கு வெள்ளம்  இழுத்துச்சென்றது. ஆனால் நாய், தனது குட்டியை விடாமல் வாயில் கவ்வியபடி,  எதிர்நீச்சல் போட்டு பத்திரமாக கரைசேர்ந்தது. இதனைப்பார்த்து அங்கிருந்த  பொதுமக்கள் நாய்கு உள்ள பாசத்தை எண்ணி நெகிழ்ந்துபோயினர்.

Related Stories:

>