×

தென்காசி மலையடிவார பகுதியில் புலிகள் நடமாட்டம்? : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதிகளில் புலிகள் குடும்பத்துடன் கூட்டமாக நடமாடுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் பொதுமக்களிடை யே அச்சம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர் நிலை அருகே 4 புலிகள் உற்சாகமாக சுற்றித்திரியும் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ காட்சியின் துவக்கத்தில் செடிகளுக்கு மத்தியில் ஒரு புலி தெரிவது போன்று தொடங்கினாலும் வீடியோவின் இறுதியில் 4 புலிகள் நிற்பது போன்று நிறைவடைகிறது. ஒருநாள் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புளியரை பகுதியில் புலி நடமாட்டம் என்றும் மறுநாள் கடனாநதி, ராமநதி பகுதியில் புலி நடமாடுவதாகவும் சமூகவலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வனப்பகுதிக்கும் மலையடிவார பகுதிக்கும் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள கிராம மக்களும் ஒருவித பீதிக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியே செல்வதையும், பகல் நேரங்களில் கூட தனியே வெளியே செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.

பொதுவாக மலை அடிவாரப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் தற்போது புலிகள் கூட்டமாக நிற்பது போன்று பரவியுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தின் அணைக்கட்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் புலிகள் கூட்டமாக நடமாடுவதாக பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. இந்த வீடியோ காட்சிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். அப்போதே வனத்துறையினர் வாட்ஸ் அப் குழுக்களில் இந்த வீடியோ பரவியது. தற்போது அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியை குறிப்பிட்டு அந்தந்த பகுதிகளில் புலிகள் நடமாடுவதாக சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர். நமது பகுதியில் களக்காடு, முண்டந்துறை, புளியரை முக்கோணம் பகுதி தாசில்தார் எஸ்டேட், குற்றாலம் மலைப் பகுதி தெற்குமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் நடமாட்டம் உள்ளது. புலிகள் பெரும்பாலும் உயரமான இடத்தில் தான்  வசிக்கிறது. உயரம் குறைந்த பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. புலிகள் 15 முதல் 40 கிலோ மீட்டர் வரை எல்லைகளை வகுத்துக் கொண்டு அதற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகளை வேட்டையாடும் பழக்கம் உள்ளவை.

40 கிலோ மீட்டர் வரை அவை நடந்து செல்லும். கடந்த முறை வனப்பகுதியில் வைக்கப்பட்ட காமிரா பதிவுகளில் புலி, சிறுத்தை, யானை, மான், மிளா, கரடி, கேளை ஆடு கடமான், எறும்புத்தின்னி, செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது என்று தெரிவித்தனர். இதற்கிடையே பொது மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் மலையடிவார பகுதி கிராம மக்களிடம் உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டங்களை பொருத்தவரை கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகரித்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். ஊரடங்கு காலத்தில் பல விலங்குகள் வனப்பகுதியை விட்டு இறங்கி சாலையில் நடமாடுவதாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் தற்போது புலிகள் நடமாடுவது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : foothills ,Tenkasi , Tenkasi, Tigers roaming, on social media, by video
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...