×

வேதாரண்யத்தில் மானாவாரி சம்பா சாகுபடிக்கு போதிய மழை இன்றி பாதிப்பு: விவசாயிகள் கவலை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மானாவாரி சாகுபடிக்கு போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 14,000 ஏக்கரில் மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யும் மானாவாரி சாகுபடி இடங்கள் உள்ளது. இந்த ஆண்டு ஒருபோக சம்பா சாகுபடி ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், நெய்விளக்கு, குரவப்புலம், தென்னம்புலம், காரியப்பட்டினம், தேத்தாக்குடி, செம்போடை உள்ளிட்ட 25 கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு 60 நாள் கடந்த நிலையில் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது. வழக்கமாக வங்கக்கடலில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் புயல் உருவாகும் நேரத்தில் வேதாரண்யம் பகுதியில் சுமார் நல்லமழை பெய்யும்.

வழக்கமாக வடகிழக்கு பருவமழை ஆண்டொன்றுக்கு வேதாரண்யத்தில் 100 செ.மீ வரை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கால தாமதமாக் துவங்கியதால் சம்பா சாகுபடி பயிர்கள் சரிவர வளர்ச்சி அடையவில்லை. நிவர் புயல் உருவான நேரத்தில் நல்லமழை பெய்யும் என விவசாயிகள் காத்திருந்தனர். வேதாரண்யம் பகுதியில் புயல் உருவான நாளில் இருந்து கடும் மேகமூட்டமாகவும் இருந்தது. நல்லமழை பெய்யும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாரல்மழை மட்டுமே பெய்தது. புயல் உருவான நேரத்தில் குறைந்தபட்சமாக 25 முதல் 40 செ.மீ வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு நாள்களிலும் 5 செ.மீ மழை மட்டுமே பெய்தது. இதனால் சம்பா சாகுபடி வயல்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் விழாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : rainfall ,Vedaranyam , In Vedaranyam, rainfed samba, without rain, vulnerability
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்