×

15 ஆண்டாக தொடரும் அவலம் சேறும் சகதியுமான மயானப்பாதை: சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் அவதி

கடத்தூர்: கடத்தூர் ஒன்றியம் கோத்துரெட்டிப்பட்டி ஊராட்சியில், சமீபத்தில் பெய்த மழையால் மயானத்துக்கு செல்லும் பாதை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் நேற்று சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் கோத்துரெட்டிப்பட்டி ஊராட்சி செங்கான் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்ல விவசாய நிலத்தை ஒட்டிய களிமண் சாலை வழியாக செல்ல வேண்டும். மழை காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மேலும், பாதையின் இருபுறமும் மரம், செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுவதால், கிராமத்தில் யாராவது இறக்கும்போது, சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மயானத்துக்கு செல்லும் பாதையை, தார்சாலையாக மாற்றித்தரக்கோரி, கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் மயானப்பாதை சேறும் சகதியுமாக மாறியது. நேற்று கிராமத்தில் இறந்தவரின் சடத்தை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பலர் சேற்றில் சறுக்கி விழுந்து அடிபட்டனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோத்துரெட்டிப்பட்டியில் மயானத்துக்கு செல்லும் பாதையை, தார்சாலையாக தரம் உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : 15 years, miserable, muddy mess, graveyard
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...