காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

* நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பின * வெள்ளமாக ஓடும் தண்ணீர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பால், அடுத்த வாரம் அறுடைக்கு தயாராக இருந்த 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்தன. இதனால், விவசாயிகள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை, மிதமான மழை என தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு, நிவர் புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் அதிகாலையில் கரையை கடந்தது.இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம், ஈஞ்சம்பாக்கம், வேளியூர், நத்தப்பேட்டை, களியனூர், வையாவூர் உள்பட சுற்று வட்டார கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். அடுத்த வாரம் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், கனமழையால் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க  வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நேரு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில் 300 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.பொன்விளைந்தகளத்தூர், கொண்டங்கி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், கொளவாய் உள்பட 13 பெரிய ஏரிகள் நிரம்பின. மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில், முழு கொள்ளளவான 23.50 அடியில் 21 அடி நிரம்பியுள்ளது. 16 அடி கொள்ளளவு கொண்ட பாலூர் ஏரி, 6 அடி நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த மழையால் திம்மாவரம் மகாலட்சுமி நகர், ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், மேலமையூர், வல்லம், ஆத்தூர் தென்பாதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலமையூர், கொளவாய் ஏரியின் உபரிநீர், வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியால் தவிக்கின்றனர்.

வடகால் பகுதியில் 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பாலூர் - கரும்பாக்கம் சாலையில் தரைபாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 கிராம மக்கள் தவிக்கின்றனர்.பாலூர், கரும்பாக்கம், கொளத்தாஞ்சேரி, கொங்கணாஞ்சேரி, ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குடிசைகளில் வசிக்கும் இருளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நீஞ்சல்மடு அணை நிரம்பியதை தொடர்ந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சிங்கபெருமாள் கோயில் அருகே விஞ்சியம்பாக்கம் ஏரியின் உபரிநீர் 3 நாட்களாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து திருத்தேரிக்கு செல்கிறது. இதனால் சாலையில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது.பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஏரிகள் நிரம்பியதால் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாணவர்கள் தவிக்கின்றனர்.தண்டோரா மூலம் எச்சரிக்கை செங்கல்பட்டு கலெக்டர் பிரியா (பொறுப்பு) விடுத்துள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால், மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதையொட்டி, முழு கொள்ளளவான 23.5 அடியை தற்போது ஏரியில் தண்ணீர் எட்டியுள்ளது. இதையடுத்து, கலங்கல் மூலம் உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், உபரிநீர் செல்லும் கிளியாற்றை ஒட்டியுள்ள கரையோர  கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்,  ஆற்றில் குளிக்கவும். துணி துவைக்கவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட கரையின் இருபுறங்களில் உள்ள கருங்குழி, பூதூர், ஈச்சூர், இருசமநல்லூர், குன்னத்ததூர், நீலமங்களம், முறுக்கஞ்சேரி, முள்ளி, விழுதமங்கலம், முன்னுத்தி குபபம், வளர்பிறை, கத்திலிசேரி ஆகிய கிராம மக்கள், ஆற்றில், விளையாடவோ, மீன் பிடிக்கவோ செல்ல கூடாது. இதுதொடர்பாக தண்டோரா போட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்தும் நிரம்பாத ஏரி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரிமேரூர் ஏரி 2,719 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள 8 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேடப்பாளையம், காக்கநல்லூர், முருக்கேரி, நீரடி, புலியூர், குப்பையநல்லூர், காவனூர்புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர் உள்பட 18 கிராமங்களை சேர்ந்த 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.இந்த ஏரியில் தண்ணீர் முழு கொள்ளவை எட்டினால் விவசாயிகள் 3 போகமும் பயிர் சாகுபடி செய்வார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் நிரம்பியுள்ளன.

ஆனால், உத்திரமேரூர் ஏரியில் 7 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.ஏரியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. நீர்வரத்து கால்வாய்கள் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழை வந்தாலும் ஏரிக்கு வராமல் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. செய்யாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே, ஏரிக்கு நீர்வரத்து வரும் நிலை உள்ளது.

விவசாயிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில் 1149 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி மணிமங்கலம், கரசங்கால், வரதராஜபுரம், மலைபட்டு, சேத்துபட்டு தர்காஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.

10 மதகுகள், 3 கலங்கல்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் கரை, மதகு, கலங்கல்கள் சீரமைக்கப்பட்டன. ஆனால் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையில் ஏரியில் தண்ணீர் நிரம்பி, 8வது மதகு மற்றும் கரை சேதமாகி தண்ணீர் கசிந்து வெளியேறியது. இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் கசிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரி உடையாமல் தடுத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியின் 8வது மதகு, கரையை பொதுப்பணி துறை சார்பில் சீரமைக்கப்பட்டது. அப்போது, கரையை மழைநீர் அடித்து செல்லாத வகையில், கருங்கற்கல் அமைக்கவில்லை. இந்தவேளையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் மணிமங்கலம் ஏரி முழுமையாக நிரம்பியது. நேற்று காலை மணிமங்கலம் ஏரியில் 8வது மதகை ஒட்டிய கரை சேதமாகி, அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயத்தை எட்டியது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள், சேதமான பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

Related Stories:

>