மெரினாவில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை திடீர் சேதம்: நாசவேலையா போலீசார் விசாரணை

சென்னை:  மெரினா கடற்கரை காமராஜர் சாலையோரத்தில் திருவள்ளுவர், அவ்வையார், கண்ணகி, காந்தி, பாரதியார், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1968ம் ஆண்டு திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அமைக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2002 மே மாதம் இரவோடு இரவாக இந்த சிலை அகற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அறிஞர்கள் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் திமுக ஆட்சியில் கண்ணகி சிலை அதே இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த சிலையின் மேடையில் இருந்த சிமென்ட் மற்றும் மார்பிள் கற்கள் நேற்று முற்றுலும் உடைந்து கிடைந்தது. தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, யாரேனும் இந்த சிலையை சேதப்படுத்தினார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிலை சேதம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை மட்டும் அடிக்கடி சேதமடைந்து வருவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories:

>