×

தூத்துக்குடி கடலோர காவல் படையிடம் சிக்கிய சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பல் கோர்ட்டில் ஆஜர்: ஹெராயின், துப்பாக்கிகள் ஒப்படைப்பு

தூத்துக்குடி: கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 10 கடல் மைல் தொலைவில் நின்றிருந்த இலங்கை படகில் இருந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கினர். இவர்களிடமிருந்து ரூ.590 கோடி மதிப்பிலான போதைப்பொருள், 5 நவீன பிஸ்டல்கள், சாட்டிலைட் போன், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில்,  படகின் உரிமையாளரான இலங்கை நிகம்புவில் உள்ள அலென்சு குட்டிகே தலைமையில் 6 பேரும் செயல்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனிடம் 6 பேரையும் அவர் கடந்த அக்.16ம் தேதியே படகில் அனுப்பி வைத்துள்ளார். பல தடைகளுக்குப்பிறகு கடந்த 13ம் தேதி கராச்சியிலிருந்து வந்த ஒரு பாய்மர படகில் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேர் கொண்டு வந்த போதைப்பொருட்களை இவர்களின் படகிற்கு மாற்றியுள்ளனர். அதன் பின்னரே அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடல் பயணத்தில சாட்டிலைட் போனை பயன்படுத்தியதால் இந்திய பாதுகாப்பு துறையினருக்கு  தெரியவந்தது. அவர்கள் உணவு மற்றும் எரிபொருளுக்காக இந்திய கடல் எல்லைக்கு வந்தபோது கடலோர காவல்படையிடம் சிக்கியது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட 6 பேரும் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் என்சிபி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் படகு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.தொடர்ந்து நேற்று மாலை வரை என்சிபி தென்மண்டல இயக்குநர் புருனோ தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 6 பேர் மீதும் மதுரை என்சிபி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துதூத்துக்குடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 2வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. பிடிபட்டவர்களிடம் என்சிபி அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.



Tags : Thoothukudi Coast Guard ,drug trafficking gang court , Thoothukudi Coast Guard trapped Azar in international drug trafficking gang court: handing over heroin, guns
× RELATED தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு...