×

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் திருவண்ணாமலை நகருக்குள் நுழைய வெளியூர் மக்களுக்கு திடீர் தடை: மகா தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 29ம் தேதி (நாளை) அதிகாலை பரணி தீபமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கு அனுமதியில்லை. எனவே, 28, 29ம் தேதிகளில் திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. மேலும், வழக்கமான பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வரும் பஸ்களும் மற்ற அனைத்து வாகனங்களும் நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்படும். பொதுமக்களை தடுத்து நிறுத்தி கண்காணிக்க, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் அணுகுசாலைகளில் 15 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. நேரில் வந்து தீபத்தை தரிசிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கோயில் இணையதளம் மற்றும் ெதாலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 29ம் தேதி கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மகா தீபம் தரிசிக்க மலைமீது பக்தர்கள் செல்லவும் அனுமதியில்லை. மலைக்கு செல்லும் வழிகளை கண்டறிந்து, கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 30ம் தேதி பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

2,668 அடி உயர மலை மீது நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா நாளை நடக்கிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்கான மகா தீப கொப்பரை இன்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். இதையொட்டி கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம், நகர எல்லையில் கூட்டம் சேராமல் தவிர்க்க கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai ,Karthika Fire Festival ,Devotees , Today and tomorrow ahead of the Karthika Fire Festival Sudden ban on foreigners entering Thiruvannamalai: Devotees are not allowed on the Great Fire
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...