×

1000 கோடி பெற்றவர் வெளிநாடு தப்பும்போது ஏழைகளிடம் குண்டர்கள் மூலம் துன்புறுத்தி கடனை வசூலிப்பதா?: வங்கிகளுக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

மதுரை: ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றவர்கள் வெளிநாடு தப்பும்போது, ஏழைகளை மட்டும் துன்புறுத்துகிறார்கள். வட்டிக்கு வட்டி கேட்பது நியாயமற்றது. குண்டர்கள் மூலம் வசூலிப்பதற்கு பதில் கடன் கொடுக்காமலே இருக்கலாம் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த ஜெயராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்சி சின்னக்கடை வீதியிலுள்ள ஒரு வங்கியில் நீண்டகால கடனாக ரூ.50 லட்சமும், வீட்டுக்கடனாக ரூ.15 லட்சமும் பெற்றேன். வீட்டுக்கடனுக்காக ரூ.18 லட்சமும், நீண்டகால கடன் தொகையில் ரூ.25 லட்சமும் செலுத்தியுள்ளேன். தொழில் சரியாக நடக்காததால் சரிவர பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அடமானமாக பெற்ற விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி, பணத்ைத வரைவோலையாக செலுத்த சென்னை அலுவலகம் சென்றேன். இதை வாங்க மறுத்து தூக்கி வீசினர். எனவே, நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘வங்கிகள் பணம் வசூலிப்பதில் உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கம் பெற்று, அதற்கேற்ப முடிவெடுக்க வேண்டும். அதன் பிறகே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் செலுத்த முடியாத நிலையில் வட்டிக்கு வட்டி கேட்பது நியாயமற்றது. வங்கிகள் எந்த விதியின் அடிப்படையில் கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் வழங்குகின்றனர்?. தனியார் நிறுவனங்களோ குண்டர்களை வைத்து கடன் தொகையை  வசூலிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பதில் கடன் கொடுக்காமலே இருந்துவிடலாம். வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.

சிறிய அளவிலான கடன்கள் வாங்கும் ஏழைகளிடம் கடுமையாகவும், துன்புறுத்தியும் பணம் வசூலிக்கிறார்கள். வரைவோலையை தூக்கி வீசியது தொடர்பான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் வீடியோ கான்பரன்சில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்தனர்.



Tags : recipient ,poor ,branch ,banks , When the recipient of 1000 crore escapes abroad Thugs harass the poor and collect loans ?: iCourt branch strongly condemns banks
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...