×

முழு கொள்ளவை எட்டும் சென்னை குடிநீர் ஏரிகள் 4 நாள் மழையில் 1.2 டிஎம்சி தண்ணீர் கிடைத்தது: குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது

சென்னை: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதே நிதர்சன உண்மை. பருவமழை பொய்த்து போகும் காலங்களில் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறுவது என்பது தமிழக அதிகாரிகளுக்கு சவாலான காரியமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் சந்தித்தனர். அதுபோன்ற நேரங்களில் மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர வேண்டும் என்பதாகும்.  இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. அதுமட்டுமல்ல இந்த ஆண்டு கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு கிருஷ்ணா கால்வாய் மூலம் 3.4 டிஎம்சி தண்ணீரை தந்துள்ளது. இதனால் வரும் மாதங்களை சமாளித்து விடலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

 இந்நிலையில், திடீரென சென்னை நோக்கி வந்த நிவர் புயலால் கடந்த 4 நாட்களாக விடாமல் வெளுத்து வாங்கிய மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருப்பது சென்னை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் பெய்த மழையால் மட்டும் 1,258 மில்லியன் கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளது. அதாவது 1.2 டிஎம்சி அளவு தண்ணீர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி இந்த ஏரிகளின் நீர்மட்டம் 8 டிஎம்சியை கடந்துள்ளது. 3,231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2,214 மில்லியன் கனஅடியாக உள்ளது. 2,527 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர்மட்டம் 764 மில்லியன் கன அடியாக உள்ளது.

 3,300 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 2,790 மில்லியன் கன அடியாக உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 3,176 மில்லியன் கன அடியாக உள்ளது. அதன்படி, இந்த ஏரிகளின் நீர்மட்டம் மொத்தமாக 8,490 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
 கடந்த 23ம்தேதி இந்த ஏரிகளின் நீர்மட்டம் மொத்தமாக 7,232 மில்லியன் கன அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் பெறுவதற்கு எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், 4 நாட்களில் 1.2 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருப்பது அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.   


Tags : Chennai ,drinking water lakes , Chennai drinking water lakes reach 1.2 TMC water in 4 days: No shortage of drinking water
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...