×

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தாத மத்திய, மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் திமுக தாக்கல்

சென்னை:  மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக சார்பில், செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக, மதிமுக, பாமக, தி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு அளித்த தீர்ப்பில், “மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ.யும் தீர்மானிக்க வேண்டும்.

குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். எனவே, இட ஒதுக்கீடு குறித்து மத்திய,  மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் ஆகியோர் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள்  முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த உத்தரவின்படி குழு அமைத்து முடிவெடுக்காததால் மத்திய அரசு மீதும், தமிழக அரசு மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 27ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் குழு அமைக்கவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் ஆலோசகர் டாக்டர் அதானி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் உறுப்பினர் டாக்டர் உமாநாத், மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ஆர்.கே.வாட்ஸ், பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் சபயாச்சி சாஹா, மருத்துவ கல்வி உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் னிவாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு அமைக்கப்பட்டதே உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தமிழ்நாடு சுகாதார துறை செயலாளரை குழுவில் நியமிக்க வேண்டிய இடத்தில் மருத்துவ பணிகள் கழகத்தின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இது முழுமையான நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த குழு 3 மாதங்களுக்குள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டிய நிலையில் இன்றுவரை குழு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.

அகில இந்திய இடங்களில் 69 சதவீத இடங்கள் மாநிலங்களுக்கானது என்ற உரிமை சரியான குழு அமைக்கப்படாததாலும், உரிய காலத்தில் முடிவெடுக்காததாலும் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளருக்கும், தமிழக தலைமை செயலாளருக்கும் நீதிமன்ற அவதிப்பு நோட்டீஸ் நவம்பர் 4ம் தேதி அனுப்பியும் இதுவரை பதில் தரவில்லை. எனவே, மத்திய அரசு மீதும், தமிழக அரசு மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.அகில இந்திய இடங்களில் 69 சதவீத இடங்கள் மாநிலங்களுக்கானது என்றஉரிமை சரியான குழு அமைக்கப்படாததாலும், உரிய காலத்தில் முடிவெடுக்காததாலும் கேள்விக்குறியாகி உள்ளது



Tags : State ,Governments ,non-implementation ,Central ,DMK ,Chennai I Court , 50% reservation order for OBC in medical study not enforced On the central and state governments Contempt of court case: In Chennai iCourt Filed by DMK
× RELATED தமிழக மீனவர்களின் சிக்கலுக்கு...