×

சூரப்பா மீது இன்று முதல் நேரடி புகார் அளிக்கலாம்: நீதிபதி கலையரசன் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது இன்று முதல் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அண்ணா உயர் அந்தஸ்து வேண்டும் என்றும், மாநில அரசின் தயவு தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலையில் நடந்த ஆன்லைன் தேர்வை தனியார் நிறுவனம் மூலம் நடத்தி பணம் மோசடி செய்தது, ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. அதேபோல், ஐஐடியில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டதும் சர்ச்சையானது. இப்படி சூரப்பா மீது அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தன.

இதையடுத்து, தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை ஆராய்வதற்கான விசாரணை குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த நவ.11ம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி கலையரசன் துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.இந்நிலையில் inquirycomn.vc.annauniv@gmail.com என்ற இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி மூலம் ஏராளமானவர்கள் புகார் அளித்தனர். அதேபோன்று, பல்கலைக்கழக ஊழியர்களும் புகார் அளித்தனர். இதையடுத்து சூரப்பா மீது ரூபாய் 280 கோடி மோசடி புகார் ஒன்று கூறப்பட்டது. மேலும் நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், அவருடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நீதிபதி கலையரசன் சூரப்பா மீது புகார் அளிப்பவர்கள் நேரில் வந்து எழுத்து பூர்வமாக புகார் அளிக்கும்படி கூறியிருந்தார். அதன்படி புகார் அளிப்பவர்கள் இன்று முதல் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர்களிடம் அடுத்த வாரம் முதல் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




Tags : announcement ,Kalaiyarasan ,Surappa , Surappa can file direct complaint from today: Judge Kalaiyarasan's announcement
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...