×

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 4 மதகுகள் வழியாக 1000 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 4 மதகுகள் வழியாக, 1000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பின. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகள் மொத்த கொள்ளளவை எட்டியதன் காரணமாக, பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு  கிருஷ்ணா கால்வாய் மூலம் 450 கனஅடியும், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரும் மற்றும் மழைநீரும் சேர்ந்து கொசஸ்தலை ஆற்றின் வழியாக வினாடிக்கு 9 ஆயிரத்து 804 கன அடி என மொத்தம் வினாடிக்கு 10 ஆயிரத்து 254 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் தற்போது 2 ஆயிரத்து 624 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதாலும், ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 33.35 அடியை எட்டியுள்ளதாலும்  ஏரியின் பாதுகாப்பை கருதி  பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேற்று மாலை 5 மணி அளவில் 5, 6, 11, 14 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீரை கொசஸ்தலை ஆற்றின் வழியாக திறந்து விட்டனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கே.எஸ்.விஜயகுமார், திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ், ஒன்றிய குழு பெருந்தலைவர் பி.வெங்கட்ரமணா, துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் ஒதப்பை, எறையூர், தாமரைப்பாக்கம் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து காரனோடை, ஜனப்பசத்திரம், எடையார் சாவடி வழியாக எண்ணூர் கடலில் கலக்கும். இந்த தண்ணீர் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்கள் வழியாக செல்லும் என்பதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 560 கன அடி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியதை தொடர்ந்து, கடந்த 25ம் ேததி முதற்கட்டமாக அன்று இரவு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நீர்வரத்து 1,500 கன அடியாக குறைந்ததால் 500 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேலும், அடையாற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் நேற்று முன்தினம் மாலை வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், ஏரியின் நீர் மட்டம் 22.24 அடியாக உயர்ந்தது. நேற்றுமுன்தினம் மாலை அடையாற்றில் வெள்ள நீர் குறைந்த நிலையில், அவசர அவசரமாக இரவு 8 மணியளவில் 1,500 கன அடி  திறக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1420 கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து 1000 கன அடி வீதம் நீர் குறைக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 560 அடியாக குறைந்த நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போதைய நிலையில் 24 அடி கொள்ளளவு ெகாண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.22 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தர வேண்டியிருப்பதால் 22 அடிக்கு குறையாமலும், ஏரியின் பாதுகாப்பு கருதியும் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : water opening ,Boondi Lake , As Boondi Lake has reached full capacity 1000 cubic feet of water opening through 4 canals: Warning to coastal people
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...